‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை எழுதியது ஏன்? – அமைச்சர் வேலு சொன்ன காரணம்!

Published On:

| By Selvam

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது,

‘கலைஞர் எனும் தாய்’ இந்த புத்தகத்தை வெளியிட எனக்கு உந்து சக்தியாக இருந்தது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முதல் பாகத்தின் பக்கம் 581-ல் கலைஞர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் தான். அதில் ‘தமிழ் மொழிக்காக பாளையங்கோட்டை சிறையில் கலைஞர் இருந்த காலத்தில் திருநெல்வேலியை சேர்ந்த சைவ சித்தாந்த பதிப்பகத்தார் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நூலை எனக்கு வழங்கினர். அந்த புத்தகத்தை படித்த போது பெருமைத்தக்க ஒரு இனிமையை பெற்றேன்’ என்று கலைஞர் எழுதியிருந்தார்.

அதன்பிறகு அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. பின்னர் சென்னையில் நியூ செஞ்சுரி புக் சென்டருக்கு சென்று அந்த புத்தகத்தை வாங்கி வந்தேன்.

அதேபோல, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக சங்கரநாராயணன் என்று ஒருவர் இருந்தார். அவர் அவ்வை நடராஜனின் உறவினர்.

சங்கரநாராயணனுக்கு வயது 85. என்னை பார்க்க வேண்டும் என்று விரும்பி இரண்டு நண்பர்களிடம் சொல்லி அனுப்பினார். நானே, திருவண்ணாமலைக்கு பக்கத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூரில் உள்ள அவரது இல்லம் தேடி சென்றேன். அவரது மகன் மெய்கண்டதேவன் தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.

அவரை சந்தித்து ‘ஐயா என்னை வரசொன்னீர்களே… என்ன?’ என்று கேட்டேன். அப்போது,’ பலமுறை முயன்றும் தமிழகத்தின் முதல்வர் கலைஞரை பார்க்க எனக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் பலபேர் டாக்டர் பட்டம் பெறுவதற்கு நான் உதவியாக இருந்துள்ளேன். புறநானூறு, அகநானூறு பல்வேறு இலக்கியங்களை படித்திருக்கிறேன்.

எனக்கு ஆச்சிரியத்தக்க விஷயம் என்னவென்றால், பட்டிமன்றமாக இருந்தாலும் கவியரங்கமாக இருந்தாலும் முதலில் கலைஞர் தான் இருக்கிறார். திரையுலகம், அரசியல் என எதிலும் முதன்மையாக இருப்பவர் கலைஞர். இது அனைவருக்கும் சாத்தியக்கூறு அல்ல, கருவில் திரு என்கிற தாய்மை கலைஞருக்கு இருந்ததால் தான் இந்தியாவிலேயே முதன்மையான தாயாக இருக்கிறார். இந்த செய்தியை சென்று அவரிடம்  சொல்லுங்கள்’ என்றார்.

கோபாலபுரத்தில் கலைஞரின் பக்கத்தில் இருந்தபோது, இந்த செய்தியை சொன்னேன். வானத்தில் மதி எப்படி முழு நிலவாக இருக்கிறபோது முகம் இருக்குமோ அப்படி கலைஞரின் முகம் மலர்ந்ததை நான் பார்த்தேன். அப்பொழுது தான் இந்த தாயை பற்றி ஒரு காவியத்தை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஏறத்தாழ 11 ஆண்டுகள் எப்பொழுதெல்லாம் எனக்கு அரசு பணிகள், கழக பணிகள் இல்லாதபோது, ஓய்வு கிடைக்குமோ அந்த நேரத்தில் இரவு 11 மணிக்கு மேல் 1 மணி வரை பல்வேறு புத்தகங்கள் படித்து குறிப்பெடுத்து இந்த புத்தகத்தை எழுதினேன்.

ஒரு காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியங்கள் தான். ஒரு பகுத்தறிவாளன் இப்படி பக்தி இலக்கியம் பற்றி பேசுகிறாரே என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மை என்னவென்றால், பிற்பகுதியில் திராவிடம் தமிழை வளர்த்திருந்தாலும், தமிழை வளர்த்த பெருமை பக்தி இலக்கியத்திற்கு உண்டு.

தமிழ்நாட்டுக்கு தாயாக இருந்து இன்றைக்கு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அளித்துக்கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலின் திருக்கரத்தால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்று கருதினேன். இந்த புத்தகத்தை வெளியிட்ட ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்த புத்தகத்தை வெளியிட இருக்கிறார் என்று அவரிடம் சொன்னவுடன் சம்மதம் தெரிவித்தார். இன்றைக்கு அவருக்கு ஆந்திராவில் படப்பிடிப்பு இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

1999-ஆம் ஆண்டு முதல்வன் என்ற ஒரு படம் வந்தது. திரைப்படத்துறையில் எனக்கு ஈடுபாடு உண்டு. திரைப்பட விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார், முதல்வன் படத்திற்கு ரஜினிகாந்தை நடிக்க வைக்க வேண்டும் என்று ஒரு முயற்சி நடந்தது. அவரிடம் கேட்டபோது தமிழ்நாட்டில் பெரியவர் கலைஞர் ஆண்டுகொண்டிருக்கிறபோது நான் அதில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவரது பெரிய உள்ளத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞரின் வாழ்க்கை வரலாறு, செயல்பாடு என்பது வங்காள விரிகுடா போன்றது. ஆனால், எனக்கோ ஒரு வாளி தண்ணீர் தான் கிடைத்தது. அந்த வாளி தண்ணீர் தான் உங்களுக்கெல்லாம் பருகியிருக்கிறேன். நிறைவிருந்தால் போற்றுங்கள், குறைவிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிப்பிக்குள் முத்து… அமைச்சர் வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

முதல் பட ரிலீசுக்கு பிறகுதான் வீட்டில் பாத்ரூமே கட்டினோம்!- மாரி செல்வராஜ் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share