கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம்… : சுற்றுலா பயணிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு சொன்ன சூப்பர் தகவல்!

Published On:

| By Kavi

குமரியில் கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் 40 நாட்களில் நிறைவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும், மற்றொரு பாறையில் விவேகானந்தர் மண்டபமும் உள்ளது. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது.

திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்க Bowstring Arch Bridge என்ற கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது,

இதனை ஆய்வு செய்வதற்காக தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (நவம்பர் 21) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்துக்குச் சென்றார். அங்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டால் அது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருக்கும். இதற்குமுன் விவேகானந்தர் பாறைக்குச் சென்றால் மீண்டும் வந்து போட்டில் ஏறி அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

இதில் சில கால தாமதம் ஆகும். இப்போது 2 நிமிடத்தில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்றுவிடலாம்” என்றார்.

 

இந்த பாலத்துக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்ற கேள்விக்கு, “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல பேர், பெயர் வைப்பது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டுச் செல்லுங்கள் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.

நாகர்கோயில் மேயர் என்னிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பல கட்டிடங்களுக்கும் அவர் பெயர் வைத்த நிலையில், இந்த பாலத்துக்கும் அவர் பெயர் வைக்க வேண்டுமென என்னிடத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்.

தற்போது 85 சதவிகித பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இது சாதாரண பணியல்ல. தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாலம் கட்டியதில்லை.

கடல் அலையின் வேகத்தையும், காற்றின் வேகத்தையும் மதிப்பிட்டு அமைத்து வருகிறோம். இன்னும் 40 நாட்களில் எஞ்சியிருக்கக் கூடிய பணிகள் முடிக்கப்படும் என்று நம்புகிறேன்.

உறுதித்தன்மையில் எந்தவித மாற்றமும் இருக்காது. டெக்னாலஜி தெரிந்தவர்களை அழைத்து வந்து பணிகளை செய்து வருகிறோம். முதலமைச்சர் மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். கன்னியாகுமரிக்கு வரும் போது இந்த மாவட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுவார்” என்றார்.

Image

முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணித்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் மதுரை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் மதுரையில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கார் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

கிட்டாரிஸ்ட் மோகினி தே குறித்து ஏ.ஆர். ரஹ்மானின் மனைவியின் வழக்கறிஞர் சொன்ன தகவல்!

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிவது உறுதியா ? – நீதிமன்றத்தில் ஆஜரான பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share