போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரையில் அமைச்சர் எ.வ.வேலு இன்று (அக்டோபர் 3) ஆய்வு செய்தார்.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கான ஒத்திகை கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி வானில் குட்டிக் கரணங்கள் அடித்தும், ஸ்கை டைவிங் செய்தும் சாகசம் நிகழ்த்தின.
ரஃபேல், தேஜஸ், சூர்யகிரன் போர் விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
இந்த சாகச நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பார்வையிடவுள்ளனர்.
இந்த நிலையில் போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினாவில் இன்று தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் பேசிய அமைச்சர் வேலு, “சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6 ஆம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் திரள உள்ளனர். எனவே, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் 20 தீயணைப்பு வாகனங்கள், 20 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்.
ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு கேப் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா