அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (நவம்பர் 19) காலை இதயத்தில் ஸ்டெண்ட் வைத்து சிகிச்சை பெற்ற துரைமுருகன், மாலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
திமுக பொதுசெயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு வயது 86.
எனினும் துறை ரீதியான பணிகளிலும், கட்சி பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த நவம்பர் 15ஆம் தேதி வேலூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துரைமுருகன், “என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்வோரை மன்னிக்க மாட்டேன்” என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.
சென்னையில் நேற்று(நவம்பர் 18) நடைபெற்ற 16ஆவது நிதி ஆணையக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 19) கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகனுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது.
சாதாரண உடல்நல பிரச்சினை என்றால் கூட மருத்துவமனைக்கு செல்பவர் துரைமுருகன். நேற்று 16ஆவது நிதி ஆணையக் குழு மீட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை உணந்திருக்கிறார். இருந்தாலும் முக்கியமான மீட்டிங் என்பதால் முடியும் வரை அதில் பங்கேற்றார்.
பின்னர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஈசிஜி, எக்கோ போன்ற டெஸ்ட்டுகளுக்கு பிறகு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் ஓரிடத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இன்று (நவம்பர் 19) அவருக்கு இதயத்துக்கு செல்லும் ஒரு வால்வில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தவர் அறிவாலயத்தில் முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என டாக்டர்களிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு டாக்டர்கள், இன்று ஒரு இரவு இருந்துவிட்டு நாளை (நவம்பர் 20) போகலாம் என்று அறிவுறுத்தினர்.
ஆனால் துரைமுருகன் பிடிவாதமாக அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்று சொந்த விருப்பத்தின் பேரில் டிஸ்சார்ஜ் செய்துகொண்டு, இன்று மாலை 6.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயராம கிருஷ்ணனின் மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 6.50 மணியளவில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
இன்றே ஆஞ்சியோ செய்து இதயத்தில் ஸ்டெண்ட் வைத்துக்கொண்டு சில மணி நேரங்களில் கட்சியினரின் திருமண நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்துகொண்டது அவருக்கு நெருக்கமானவர்களை நெகிழ வைத்துள்ளது.
ஏற்கனவே துரைமுருகன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி துரைமுருகன் சிங்கப்பூர் சென்று தனக்கு நெருக்கமான இதய சிகிச்சை நிபுணரான ஜெயராமனைச் சந்தித்து பரிசோதனை செய்துகொண்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…