அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு அமலாக்கத்துறை செய்த மனுவுக்குப் பிறகு நேற்று (ஜூன் 21) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மின்னம்பலத்தில் நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி மூவ்: அதிர்ச்சியில் அமைச்சர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு அரசின் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 இல் தொடர்ந்த வழக்குதான் இது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில், ‘இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியுள்ளது. அனிதாவை விசாரணைக்கும் அழைத்திருந்தது அமலாக்கத்துறை.
இந்த நிலையில்தான்… ‘சொத்துக் குவிப்பு வழக்கு அமைச்சர் மீது நடக்கிறது. இந்த வழக்கை நடத்தும் தமிழ்நாடு அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காப்பதில்தான் அக்கறை செலுத்துகிறது. எனவே பிராசிகியூஷன் முறையாக நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்புக்கு உதவ விரும்புகிறோம். assist prosecution என்ற வகையில் அமலாக்கத்துறையை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஏப்ரல் 19 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு செய்தது அமலாக்கத்துறை.
இதற்குப் பிறகு இவ்வழக்கு நேற்று, ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் உட்பட சிலர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அரசுத் தரப்பு சாட்சிகள் 5 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மூலமாக ஐந்து ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை முடிந்ததும் வழக்கை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை தங்களையும் விசாரணையில் சேர்த்துக் கொள்ளக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு என்ன ஆனது என்று தூத்துக்குடி நீதிமன்ற வட்டாரங்களில் விசாரித்தோம்.
”ஏப்ரல் 19 ஆம் தேதி அமலாக்கத்துறை தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அப்போது இருந்த நீதிபதியால் அட்மிட் செய்யப்படவில்லை. அதாவது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. நேற்றும் இதே நிலைதான் நீடித்தது. வழக்கு விசாரணையில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில்… அமலாக்கத் துறை வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தங்களது மனு குறித்து அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் காரணமாக அமலாக்கத் துறை வலியுறுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த விசாரணைக்குள் இதற்கு ஒரு முடிவு தெரியும்” என்கிறார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையும் பிராசிகியூஷனுக்கு அனுமதிக்கப்பட்டால்… மற்ற அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் அமலாக்கத்துறை நுழையும் நிலை ஏற்படலாம். அனிதா வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்றோ அதற்கு முன்போ இம்மனுவின் நிலை என்னவென்று தெரியும்!
–வேந்தன்