புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 10) குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வருக்கு பதிலளித்திருந்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? உள்ளிட்ட நான்கு கேள்விகளை கேட்டிருந்தார்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் கேள்விகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“1930-கள் மற்றும் 1960-களின் வரலாற்று இயக்கங்களில் வேரூன்றிய இருமொழிக் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனது மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளது. தமிழை நமது அடையாளத்தின் தூணாக ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளையில் வருங்கால சந்ததியினர் ஆங்கிலப் புலமை பெற்றிருப்பதை உறுதிசெய்கிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்விகளுக்கு என்னுடைய பதில்…
தமிழ் போன்ற இந்திய தாய்மொழிகளில் கல்வி கற்றுக்கொடுப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
எங்களின் கொள்கையானது எப்பொழுதும் தமிழை அடிப்படையாக கொண்டு கற்றலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆங்கில அறிவையும் மேம்படுத்தி வருகிறது.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
போட்டித்தேர்வுகளில் சம நிலையை பேண வேண்டும் மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருப்பதை உறுதி செய்வதற்காக தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பப் பாடங்களைக்கூட மொழிபெயர்த்து, தமிழில் பாடப்புத்தகங்கள் வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
சமத்துவம், எதிர்காலத்திற்கு தேவையான சிந்தனை போன்றவைகளை தனது கட்டமைப்பில் கொண்டுள்ள புதிய கல்வி கொள்கையை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப் புதல்வன் மற்றும் எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் தமிழகத்தின் முழுமையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை பிரதிபலிக்கின்றன.
தமிழ்நாடு அரசு தனது சொந்த முயற்சிகள் மூலமாக தேசிய கல்வி கொள்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.
மும்மொழிக்கொள்கை, பாடத்திட்டங்கள் மாற்றம் போன்றவை மட்டுமே எங்களுக்கு ஆட்சேபனைக்குரியது.’சமக்ரா சிக்ஷா’ திட்டத்தை அமல்படுத்தாதற்காக தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுப்பது, மாநில சுயாட்சியை மீறும் நடவடிக்கையாகும். எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணிப்பூர் கலவரம்… ஐந்து நாட்களுக்கு இன்டர்நெட் கட்!
தமிழகத்தில் 5,000 நீர்நிலைகள் புனரமைப்பு… ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு!