உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருக்கலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் 85 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களையும், 7 மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம். பாஜக தனித்தே போட்டியிட்டிருந்தாலும், அதன் செல்வாக்கை காட்டி இருக்க முடியும். கூட்டணி இல்லாமல் போட்டியிட்டிருந்தால் பாஜக அதிக இடங்களில் வென்றிருக்கும்’ எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. திமுகவினர் வெற்றிபெற்றுள்ளது தேர்தல் நியாயமான முறையில் நடந்துள்ளதையே காட்டுகிறது. ஆனால், திமுக ஆட்சிகாலத்தில் தேர்தல் ஆணையம் டம்மியாகத்தான் இருந்தது. தற்போது அதிமுகவினர் வெற்றிபெற்று ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ள நிலையில், அதனை தடுக்க திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. திமுகவை விட ஜனநாயக விரோத கட்சி உலகத்திலேயே இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல” என்று கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான் அனைவரின் பலமும் என்னவென்று தெரியும். அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது” என்று கருத்து தெரிவித்தார்.
