தனியார் பால் நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வு குறித்து அரசியல் கட்சிகள் வாய் திறக்க மறுப்பது ஏன் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி இன்று (மார்ச் 18) கேள்வி எழுப்பியுள்ளார். Milk rate increase political
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் (ஆரோக்யா பால்) நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வை தொடர்ந்து, பன்னாட்டு தனியார் பால் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தின் பால், தயிர் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது.
பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணமாக கூறி கடந்த நான்கு (டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் மூன்றாவது முறையாக பால், தயிர் விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தியுள்ளது.

இந்தநிலையில், மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அடிப்படையில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒரு முறை பால் விலை உயர்வென்றாலும் வானுக்கும், பூமிக்கும் குதிக்கும் எதிர்க்கட்சிகள் தனியார் நிறுவனங்களின் பால், தயிர் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் வழக்கம் போல் கப்சிப் என அமைதி காப்பது மக்கள் நலனிற்கு எதிரானதாகும்.
மேலும், மக்களின் நலனிற்காகவே பாடுபடுவதைப் போல் காட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவோ, மத்தியில் ஆளுகின்ற பாஜகவோ, மாநில ஆளுங்கட்சியான திமுகவோடு கூட்டணி உறவில் இருக்கும் உதிரிக்கட்சிகளோ தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் தனியார் பால் நிறுவனங்களின் தொடர் விலையேற்றம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பழைய, புதிய கட்சிகள் கூட தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்வு குறித்து பேசி அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுப்பதும், மாநில அரசின் உரிமையை கபளீகரம் செய்து கொண்ட மத்திய அரசிடமிருந்து அதனை மீட்க மாநில அரசின் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் மக்கள் விரோத செயலன்றி வேறில்லை. எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். Milk rate increase political