பேரா. நா.மணி
தேநீர் குடிக்கும்போது திடீரென்று ஓர் எண்ணம் வந்தது. உங்களுக்கு நேரம் இருந்தால், ஆழமாகச் சிந்தியுங்கள். இந்த தொடர்ச்சியான லாக் டெளன் காரணமாக, அனைத்து தேநீர் கடைகளும் தேநீர் வண்டிகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து இனிப்புக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் மற்றும் பிற வகைகளில் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை. பின்னர் மேற்கூறிய இடங்களில் உபயோகப்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான லிட்டர் பால் எங்கே போகிறது?
அதிகமாக இருந்த பால் சாலைகளில் வீசப்படவில்லை. நமக்கும் மலிவான விலையில்கூட பால் கொடுக்கவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த பாலின் அளவு என்றும் போல இன்றும் வருகிறது. மேலும் பாலை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அப்படியெனில் செயற்கைப் பால் வணிகம் சந்தையில் இவ்வளவு பெரிய அளவில் நடந்து கொண்டிருந்ததா… யோசிக்க வேண்டிய விஷயம்.
முதல் ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளங்களில் தீவிரமாக வலம்வந்த, சிந்திக்க வைப்பதாகக் கூறப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று. சிந்திக்கத் தூண்டும் உண்மையைப் போல் தெரிந்தாலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. வழமையான கற்பனை நிறைந்தது.
பால் உபரி நாடு
ஒரு நிமிடம்கூட யோசித்துப் பார்க்காமல் இந்த வழமையான கற்பனை கட்டவிழ்த்து விடப்பட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது. இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கூட கூறலாம். பால் மாடுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரும் பகுதி இந்திய சிறு விவசாயிகள் மீள முடியாத கடனில் மூழ்கிக்கொண்டு இருக்க வேண்டும் அல்லது கடன் தொல்லை தாங்காமல் செத்து மடிந்திருக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உத்தரவாதம் செய்து வருவது கறவை மாடுகள். 1991ஆம் ஆண்டு 55.6 மில்லியன் டன்களாக இருந்த இந்திய பால் உற்பத்தி, 2018-19இல் 187.7 மில்லியன் டன்களாக மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது. இதே காலகட்டத்தில் தினசரி சராசரி பால் உற்பத்தி 4,698 லட்சம் லிட்டர் என்ற அளவிலும், சராசரி தனிநபர் பால் நுகர்வு 178 கிராமிலிருந்து 394 கிராம் எனவும் அதிகரித்தது. இன்று உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 18.5 விழுக்காடு. சற்றேறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு. சுருக்கமாகக் கூறினால், பால் பற்றாக்குறை நாடாக இருந்து பால் உபரி நாடு என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
இந்திய அளவில், பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தை வகிக்கிறது. நாளொன்றுக்குப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டும் 33.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 12,585 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் 30 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.
இந்தத் தருணத்தில்தான் கொரோனா வந்தது. எல்லாத் திசைகளிலும் எல்லாத் துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டதுபோல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகள் பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி நாம் நம் கற்பனைக்கு எட்டிய வடிவத்தில் முகநூல் பக்கத்தில் முதல் பத்தியில் கூறியது போல வழமையான கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டு வந்தோம்.
பால் – பால் பொருட்கள்
ஊரடங்கு மொத்தமாக முடக்கிப்போட்டாலும் பால் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டாலும், ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பிக்க காரணம், விற்பனை ஆகாத பால், பால் பொருட்களாக மாற்றப்பட்டதே. பால் பவுடர், பால் அடைக் கட்டிகள், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களாக உருமாற்றம் செய்யப்பட்டதன் விளைவே ஆகும். பால் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு நீண்ட காலம் வைத்து இருந்து பயன்படுத்த தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இவையும்கூட சந்தையில் விற்றுத் தீரவில்லை. கொரோனா காலத்தில் பாலின் நேரடிப் பயன்பாடு குறைந்து பால் பொருட்களாக அவை மாற மாற கையிருப்பு கூடிக்கொண்டே போனது. விலைகள் சரிந்து கொண்டே வந்தது.
ஐஸ்க்ரீம் மற்றும் இதர பயன்பாடுகளுக்குத் தேவைப்படும் திடப் பால் பொருட்கள் என்று கூறப்படுவனவற்றின் (Solid Milk Products) விலை மளமளவென குறைந்துகொண்டே வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ 300 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த அமுல் நிறுவனத்தின் இந்த பொருட்களின் விலை இந்த மூன்று மாதங்களில் 250 ரூபாயாகக் குறைந்துவிட்டது. அதேபோல் தனியார் பால் நிறுவனங்களில் இதன் விலை 210 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை காரணமாக மக்களின் சராசரி பால் நுகர்வும் 15 விழுக்காடு குறைந்து போயுள்ளது. உணவு விடுதிகள், ஹோட்டல்கள், ஐஸ்க்ரீம் கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் துறையில் பாலின் நுகர்வு 25 விழுக்காட்டில் இருந்து 10.15 விழுக்காடாக சுருங்கிவிட்டது. இதனால் பாலின் விலை ஏழு முதல் எட்டு சதவிகிதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்த்திசையில் அரசு
இந்திய அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கும் பால் பொருட்களுக்கும் மானியம் வழங்கி பாதுகாக்க வேண்டிய தருணம் இது. இதற்கு மாறாக இந்திய அரசு எதிர்த்திசையில் செல்கிறது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று 10,000 மெட்ரிக் டன் பால் பவுடர் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. 15 விழுக்காடு இறக்குமதி வரியோடு இந்திய அரசு இதை அனுமதித்துள்ளது. இதேபோன்ற இறக்குமதியை 30.06.2017 மத்திய அரசு பால் பொருட்களில் அனுமதித்திருந்தது. ஆனால், அது கடந்த பிப்ரவரி மாதத்தோடு முடிந்துவிட்டது. மீண்டும் இந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அந்த இறக்குமதி ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளது.
பால் பொருட்களை தனியார் நிறுவனங்கள் நேரிடையாக இறக்குமதி செய்ய முடியாது. இந்திய அரசின் வாணிபக் கழகம் தேசிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் போன்ற அமைப்புகள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களிலும் பால் பொருட்கள் தேவைக்கு மேல் கையிருப்பு உள்ளது. இந்த நேரத்தில் ஏன் அவை வெளிநாட்டிலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்?
மத்திய அரசு அதிகாரிகள் இது ராஜதந்திர இறக்குமதி என்கிறார்கள் (Strategic import). இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிறார்கள். 10,000 டன் பால் பவுடர் இறக்குமதி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் 0.59 விழுக்காடு மட்டுமே. எனவே விவசாயிகள் பாதிக்கப்பட்ட மாட்டார்கள் என்கிறார்கள்.
பால் விவசாயிகள் அச்சம்
“நமது பால் விற்பனை ஆகவில்லை. பால் கூட்டுறவு ஒன்றியங்களில் பால் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. மானியங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி பாதுகாப்பதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் தேவையை இறக்குமதியைக் கட்டவிழ்த்து விட்டு நம்மை கவிழ்க்க நினைக்கிறதே” என்றுதானே இந்திய விவசாயிகளுக்கு எண்ணத் தோன்றும். குறிப்பாக, தனியார் பால் பண்ணைகளை நடத்துவோர் இதைக் காரணம் காட்டி விலைகளை வெகுவாக குறைக்கத் திட்டமிடலாம். அதன் விளைவாக லிட்டருக்கு ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் குறையும் என்று அஞ்சுகின்றனர் விவசாய சங்கத்தினர்.
உலக வர்த்தக நிறுவனத்தில் (WTO) ஒப்பளிப்பு செய்தபடி இந்த இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். கொரோனா என்னும் கொடூர நோய் தோற்று வதைத்தெடுக்கும் சூழ்நிலையில்கூட உலக வர்த்தக நிறுவனம் தனது ஒப்பந்தத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதும், இந்திய அரசு இந்தச் சூழ்நிலையில்கூட விதிவிலக்கு பெற்றுத் தந்து விவசாயிகளைப் பாதுகாக்காமல் ‘இறக்குமதிகளை நெறிப்படுத்த இது ஒரு தந்திரமான இறக்குமதி’ என்று கூறும் தந்திரமான வார்த்தைகளை விவரம் அறிந்த விவசாயிகள் நம்ப மாட்டார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு : பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.