பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி: துருக்கி பல்கலைக் கழகத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த டெல்லி JNU

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தானுக்கு உதவி செய்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை அழிக்க பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்நடவடிக்கைக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகள் ஆதரவாக இருந்தன. துருக்கியின் 500க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்திதான் பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தியது; இந்த டிரோன்களை எல்லாம் நடுவழியிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்துவிட்டது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவி செய்த துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Chamber of Commerce-ன் Tourism Committee தலைவர் சுபாஷ் கோயல் கூறுகையில். நிலநடுக்கத்தால் பேரழிவை துருக்கி சந்தித்தபோது இந்தியாதான் பெரும் உதவி செய்தது; இந்திய மருத்துவ குழுவினர் துருக்கிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். Operation Dost என்ற பெயரில் துருக்கிக்கு இந்தியா உதவியது. ஆனால் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போது பாகிஸ்தானை ஆதரிக்கிறது துருக்கி. ஆகையால் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கான சுற்றுலா பயணங்களைப் புறக்கணிப்பது என சுற்றுலா ஏற்பாட்டார்கள் அமைப்புகள் முடிவு செய்துள்ளதை ஆதரிக்கிறோம் என்றார்.

டெல்லி JNU அதிரடி முடிவு

இதனிடையே டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம்-JNU நிர்வாகமும் துருக்கிக்கு எதிராக அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. துருக்கி நாட்டின் இனோனு பல்கலைக் கழகத்துடனான JNU புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வெளியாகும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; ஜேஎன்யூ தேசத்துடன் இணைந்து நிற்கிறது என அதன் எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share