ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த் என வசூல் சக்ரவர்த்திகள் ஆண்ட தமிழ் சினிமாவில் நடிகர் மோகன் தனி ராஜபாட்டையில் பயணித்தவர். வெற்றி பெற்ற, வெள்ளி விழா கொண்டாடிய இவர் நடிப்பில் வெளியான படங்களின் எண்ணிக்கை இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையாகவே இருந்து வருகிறது.
இவரைப் போன்றே குறுகிய வருடங்களில் கிராமத்து நாயகனாக தனது படங்கள் மூலம் வெற்றிகளை குவித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பதட்டத்திற்குள்ளாக்கிய நடிகர் ராமராஜன். 2012 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மேதை படம் வெளியானது. அதன் பின் மீண்டும் கதை நாயகனாக ராமராஜன்நடித்த சாமானியன் மே 23 அன்று வெளியானது.
இரண்டு நாயக நடிகர்களும் நடித்த படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியானது எதிர்பாராத ஒன்று. ராமராஜனின்’ சாமானியன்’, மோகன் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள’ ஹரா’ படங்களுக்கு ஊடகங்களில் வெளியான பில்டப் செய்திகள் சொல்லி மாளாத அளவிற்கு குவிந்து கிடக்கின்றன.
ராமராஜனின் சாமானியன் வந்த வேகத்திலேயே திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன், அனுமோல், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஹரா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
மோகன் நடிப்பில் 14 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கும் படம் ஹரா.
“நான் இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டிருக்கிறேன். அது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை, மனதை பாதிக்கவில்லை ஆனால் ஹரா என் மனதுக்கு நெருக்கமான கதை இப்படிப்பட்டதொரு கதைக்காகத்தான் காத்திருந்தேன்” என மோகன் ஊடகங்களிடம், வலைத்தள பேட்டிகளில் அழுத்தமாகவே பேசியிருந்தார்.
நேற்றைய தினம் திரையரங்குகளில் படம் வெளியான பின்பு சமூகவலைதளங்களில் படம் பற்றிய விமர்சனங்கள், கருத்துகள் வெளிவர தொடங்கின. இந்த வருடம் வெளியான எந்தவொரு படத்திற்கும் இப்படிப்பட்ட மோசமான விமர்சனங்கள், கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியானதில்லை என்கிற அளவிற்கு நல்லதொரு ஒருவரிக்கதையை எழுத தெரியாமல், எடுக்கத் தெரியாமல் மோகனை வீணடித்துள்ளார் கத்துக்குட்டி இயக்குநர் விஜய ஶ்ரீ.
’மைக்மோகன் நடிக்க லேனு இங்க யார் அழுதது, போராட்டம் நடத்துனங்களா?’, ’மோகனுக்கு படம் எடுக்க தெரிந்த நல்லதொரு இயக்குநர் கிடைக்கலயா?’ என கடுமையான விமர்சனங்கள் குவிந்தது.
இந்த நிலையில் திரையரங்குங்களில் வசூல் நிலவரத்தை கேட்ட போது, ”ராமராஜன் நடிப்பில் கடந்தமாத இறுதியில் வெளியான சாமானியன் மொத்தமாகவே 50 லட்ச ரூபாய் மொத்த வசூலை தாண்டவில்லை.
நேற்றைய தினம் மோகன் நடிப்பில் வெளியான ஹரா திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 68.5 லட்சம் ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது. இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்குமா என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது குறையாமல் இருந்தாலே ஓரளவு தப்பிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன” என்றவர்கள்,
வசூல், வணிகம் உள்ள ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தனியாக நடித்தால் வசூல் குறைகிறது என்பதை புரிந்து கொண்டதால்தான் மொழிக்கு ஒரு கதாநாயகன், வில்லன், காமெடி நடிகர்களை நடிக்க வைத்து பான் இந்தியா படம் என்கிற பிம்பத்தை கட்டமைத்து முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்து தப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோசமான இயக்கத்தில் மோகன் மட்டுமே நடித்து இருக்கும் திரைப்படத்திற்கு வசூல் எப்படி அதிகரிக்கும்? என்றதோடு, மாறிவரும் சினிமா வணிக சூழலுக்கு ஏற்ப ராமராஜன், மோகன் போன்றவர்கள் கதை தேர்வு, கதாபாத்திர தேர்வுகளுக்கு தங்களை மாற்றிக் கொள்வது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நல்லது” என்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்