சிறப்புக் கட்டுரை: உயிரோடு சென்றால் போதும்… – புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை!

Published On:

| By Balaji

ச.மோகன்

வயிற்றுப் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து உணவு கிடைக்காமல் பட்டினியிலிருந்து உயிர் பிழைக்க மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய துன்பகரமான நிலையில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் வாழ்வாதாரம் தேடி கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 40,000 மில்லியன் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர் என்று அரசே தெரிவித்துள்ளது. பதிவு செய்யாதோர் இன்னும் அதிகமாக இருக்கலாம். இவர்களுள் கட்டுமானப் பணியாளர்கள், நாள்கூலிகள், தெருக்களில் விற்பனை செய்வோர், ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்வோர் என பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்கள் தொழிற்திறன் பெற்றோர் அல்லர். ஆனால், கொடுக்கின்ற வேலையைக் குறைந்த கூலியில் திறம்பட செய்து கொடுக்கும் மனநிலை படைத்தோர் ஆவர்.

புலம்பெயர்ந்தோர் சம்பாதித்தது

பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கைபேசி மூலமாகவும் நேரிலும் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்களின் வருவாய் நிலையை அறிய முடிந்தது. தனியார் கம்பெனிகளில் வேலை செய்வோர் அதிகபட்சம் மாதம் ரூபாய் 12,000 சம்பளமாகப் பெறுகின்றனர். கட்டுமானப் பணிகளில் இருப்போர் நாட்கூலியாக ரூபாய் 400 முதல் 500 வரை பெறுகின்றனர். ஓட்டுநர்கள் ரூபாய் 10,000 முதல் 15,000 வரைப் பெறுகின்றனர். வீட்டு வேலை செய்வோர் மாதம் ரூபாய் 8,000 பெறுகின்றனர். இந்த வருவாயில் ஊரில் உள்ள குடும்பத்துக்கு மாதம் 2,000 முதல் 7,000 வரை அனுப்புகின்றனர். இவர்களிடம் சேமிப்பு என்பதே இல்லை. இவர்கள் சம்பாதித்தது வாய்க்கும் கைக்கும் சரியாக இருக்கிறது என்பதே நாம் கண்டறிந்த உண்மை ஆகும்.

திட்டமிடாத ஊரடங்குக் குழப்பத்தைக் கட்டவிழ்த்தது

கடந்த மார்ச் 25ஆம்தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அரசு வழக்கம்போல் முறையான திட்டமிடலைத் தொலைநோக்குப் பார்வையுடன் செய்யத் தவறியது. இதன் விளைவாக தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தேசிய ஊரடங்கின் முக்கிய நோக்கமான “சமூக இடைவெளி” இங்கே செயலிழந்து அரசின் கண்முன்னே தோல்வி அடைந்தது. இங்கிருந்துதான் கொரோனா தோற்றுப் பரவல் அதிகமானது என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துகின்றனர். தொடர் வண்டியையும், பேருந்துகளையும் தவற விட்டோர் வேறு வழியின்றி விரக்தியில் நடைப்பயணமாகக் கையில் கிடைத்த பொருட்களோடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்தனர். இதில் சிலர் உயிரிழந்தனர் என்ற சேதி மறைக்கப்பட்ட ஒன்றாகும்.

நீண்ட தூரம் நடப்பது சாத்தியமற்றது என்று கருதியோர் பாலங்களுக்கு அடியிலும். கட்டிமுடிக்கப்படாத கட்டடங்களிலும், வேலை பார்த்த ஹோட்டல்களிலும், சுரங்கப்பாதைகளிலும், ஏற்கெனவே தங்கியிருந்த வீடுகளிலும் தங்கினர். இவ்வாறு தங்கிய லட்சக்கணக்கானோருக்கு அரசு உணவு வழங்குவதாக சேதி வெளியிடும் அதே ஊடகங்களில் லட்சக்கணக்கானோர்க்கு உணவு கிடைக்கவில்லை, அரசு அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர் என்ற சேதியையும் காண முடிந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லிச் சப்பைக் கட்டிய அரசு இறுதியில் வேறு வழியில்லாமல் அவர்களைச் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஊர் திரும்புவதில் உள்ள பயணச் சிக்கல்

பேருந்தில்தான் செல்ல வேண்டும் என்று அரசின் வழிகாட்டுதலில் சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. தொலைதூரத்தில் உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்குப் பேருந்தில் செல்வது சாத்தியமில்லை. மேலும் ஒரு மீட்டர் சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கப்படும்போது மிகக் குறைந்த பயணிகளே பேருந்தில் பயணிக்க முடியும். தமிழ் நாட்டில் பதிவு பெற்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். பதிவு செய்யாதோர் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பதிவு பெற்ற ஒன்றரை லட்சம் பேரை பேருந்தில் கொண்டு செல்வது என்றால்கூட எத்தனை நாட்கள், எத்தனை பேருந்துகள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பேருந்துக்கு 40 பேர் என்றால்கூட 3,750 பேருந்துகள் தேவைப்படும் அல்லது இருக்கிற பேருந்துகளை வைத்து 3,750 முறை செல்ல வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமாகத் தெரியவில்லை. ஆந்திர அரசு பின்பற்றியது போல் தமிழக அரசும் தொடர் வண்டிகளைப் பயன்படுத்துகிறது.

அரசின் வழிகாட்டுதலில் மிக முக்கியமான ஒன்று யாதெனில் புறப்படும்முன் இவர்களுக்குத் தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்துப் பின்னர் சேருமிடத்தில் மீண்டுமொருமுறை தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்குத் தோற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க போதிய உபகரணங்கள் உள்ளதா என்பது விடை தெரியாத கேள்வியாகும்.

உண்மை நிலை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசால் உணவு அளிக்க முடிவில்லை. தங்குவதற்கு இட வசதி செய்து தர முடியவில்லை. இதுதானே உண்மை நிலை. அவர்களின் உழைப்பைக் குறைந்த கூலியில் பயன்படுத்திய அரசால் அவர்களுக்கு இவற்றைச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது அரசின் இயலாமையைக் காட்டுகிறது. வானுயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் கட்டடங்களும், சுங்கச்சாவடி மூலம் அரசுக்கு நிரந்தர வருவாயைத் தரும் நாற்கரச் சாலைகளும் இவர்கள் உழைப்பில், வியர்வையில், அடிமாட்டுக் கூலியில் உருவானவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசும் நன்றி மறந்துவிடக் கூடாது. அவர்கள் அமைத்த நாற்கரச் சாலைகளில் அவர்கள் சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் கட்டிய வானுயர்ந்தக் கட்டடங்கள் காட்சிப் பொருளாய்த் தெரியும். அவர்கள் உழைப்பின் சாட்சியமாய்ச் சாலைகளும், கட்டடங்களும் கட்டியங்கூறும். அவர்களின் மனதுக்கு இதமாகத் தெரியும். ஆனால், இதயம் வலிக்கும். ஏனெனில் அவை அவர்களின் வயிற்றுப் பசிக்கு உதவவில்லையே என்று.

இதையும் தாண்டி சொந்த ஊர் திரும்பவே எல்லோரும் விரும்புகின்றனர் என்பதையும் நாம் கண்டறிய முடிந்தது. அப்போது அவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

பணம் ஏதுமில்லாமல் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறீர்களே… குடும்பச் சூழல் எப்படியிருக்கும் என்று கேட்டபோது, “எங்களை உயிருடன் பார்ப்பதில் குடும்பத்தாருக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்குமுன், பணம் ஒரு பிரச்சினையாகத் தெரியாது. எங்கள் கிராமத்தில் அரசு கொடுக்கும் நிவாரணத்தை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றனர்.

திரும்பி வருவீர்களா என்று கேட்டபோது, “எங்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. கொரோனா தொற்றுக்கு முடிவு கட்டி இயல்பு வாழ்க்கைத் திரும்பினால் மீண்டும் பிழைப்பு தேடி, வாழ்வாதாரம் தேடி வருவோம், குடும்பத்தினர் சம்மதித்தால்” என்று குடும்பத்தின் மதிப்பை நினைவுறுத்திப் பதிலுரைத்தனர்.

கட்டுரையாளர் குறிப்பு: மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ச.மோகன், தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share