போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் இன்று (செப்டம்பர் 2) கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் எல்&டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் அங்குள்ள தனி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் (35) என்பவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டுமெனக் கூறி 1000த்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 4 செய்தியாளர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.
மேலும் கல்வீச்சு தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாகவும், தற்போது அப்பகுதி கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
