அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. MHA decide y security
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதாகக் கூறி, நிகழ்ச்சியை புறக்கணித்தார் செங்கோட்டையன்.

இதனையடுத்து அவர் மீது தொண்டர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையின் பேரில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்த செங்கோட்டையன், ” நான் போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட வீட்டுக்கு வந்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த மார்ச் 28-ஆம் தேதி சந்தித்து பேசியுள்ளார்.
இந்தநிலையில், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் செங்கோட்டையனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. MHA decide y security
