பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்தா? – ஊடகவியலாளர் முக்தார் விவகாரத்தில் காவல்துறைக்கு ஜவாஹிருல்லா கடும் எதிர்ப்பு!

By Pandeeswari Gurusamy

|

Published on 27 May 2026, 4:15 PM

ஊடகவியலாளர் முத்தார் அகமது மீது காவல்துறையை ஏவி மிரட்டும் செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மை இந்தியா 24×7 என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் ஊடகவியலாளர் முக்தார் அகமது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக இவரது நேர்காணலை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். மே மாதம் 22ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியிலிருந்து திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் காரில் சென்றிருக்கிறார்.

ADVERTISEMENT

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சீருடை அணியாத காவலர்கள் முக்தாரின் காரை மறித்து வலுக்கட்டாயமாக தாங்கள் வந்திருந்த காரில் ஏறச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். தான் குடும்பத்துடன் வந்திருக்கிறேன், குழந்தைகளும் உள்ளனர், நீங்கள் எந்த காவல் நிலையத்திற்கு சொன்னாலும் காலையில் வருகிறேன் என்று தெரிவித்தும் அவரை தங்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி அழைத்துச் சென்று இருக்கின்றனர். அவரது அலைபேசியையும் பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். விடியற்காலை வரை காரிலேயே சுற்றிவிட்டு பிறகு இனிமேல் அரசுக்கு எதிராக எதுவும் பேசாதீர்கள் என்று மிரட்டி திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஒரு ஊடகவியலாளரை கைது செய்து அலைகழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு நெருக்கடியை உண்டாக்கும் காவல்துறையினரின் இந்த செயல் ஏற்புடையது அல்ல.

முன்னணி ஊடகவியலாளர் காவல்துறையால் நெருக்கடிக்கு ஆளாக்கி இருப்பதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel