விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்

Published On:

| By Aara

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துவிட்ட நிலையில் முக்கியப் போட்டியாளர்களான திமுகவும், பாமகவும் தங்களது தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
சட்டமன்றம் முடிந்துவிட்டதால் அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளனர். பாமக தரப்பிலும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இடைத் தேர்தல் என்றும் கூட பாராமல் 85 வயதான டாக்டர் ராமதாஸ் கிராமம் கிராமமாக சென்று பாமக வேட்பாளர் அன்புமணிக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இம்முறை அதிமுக தேர்தலை புறக்கணித்துவிட்டதால் அதிமுகவின் வாக்குகளை யார் அறுவடை செய்வது என்பதில் பலத்த போட்டி நடக்கிறது.

அதிமுக ஆதரவு தலித் வாக்காளர்களை  அதிக அளவு  தம் பக்கம் கொண்டுவந்துவிடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது. அதேநேரம் அதிமுகவில் இருக்கும் வன்னியர் சமுதாய வாக்காளர்களை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கு பாமகவும் பலத்த முயற்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். பற்றியும் அவர்  ‘தருவதாக திட்டமிட்டிருந்த’ வன்னியர் இட ஒதுக்கீடு பற்றியும் பேசி அதிமுக வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார்.

“வன்னியர் இட ஒதுக்கீடு கோரி ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்ட போதும், 21 மாவீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டும், அடித்தும் கொல்லப்பட்ட போது தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் இல்லை. மருத்துவம் பெறுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். தமிழகம் திரும்பியவுடன் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் தொடர்பாக 93 சங்கங்களின் பிரதிநிதிகளை 25.11.1987 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அழைத்துப் பேசினார். வன்னியர் சங்கத்தின் சார்பில் என்னுடன் வன்னியர் சங்கத் தலைவர் சா.சுப்பிரமணியம், பேராசிரியர் தீரன்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த சந்திப்பில், வன்னியர்களின் சமூக, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது? என்பது குறித்தும், வன்னியர்களுக்கு எதற்காக 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கிப் பேசினேன்.

‘தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், வன்னியர்களுக்கு ஒர் விழுக்காடு கூட கிடைப்பதில்லை. வன்னியர்கள் தான் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரும்பான்மை சமுதாயம். ஆனால், ஒரு விழுக்காடு தான் இட ஒதுக்கீடு கிடைக்கிறது. தமிழக அரசின் பல துறைகளின் வேலைவாய்ப்பில் எங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை.மருத்துவப் படிப்பில் அதுகூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 500 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால், வன்னியர் சமுதாயத்தினருக்கு வெறும் 3 இடங்கள் மட்டும் தான் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் வன்னியர்கள் தான் பெரும்பான்மை சமுதாயம். ஆனால், அங்குள்ள வன்னிய மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை’’ என்று ஆவேசமாக பேசினேன். முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், மூத்த அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

நான் பேசி முடித்தவுடன் அமைச்சர்களை எம்.ஜி.ஆர் கோபமாக பார்த்தார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சரளமாக பேச முடியவில்லை. ஆனாலும், ‘இதல்லாம் என்கிட்ட ஏன் சொல்லலை?’ என்று திக்கித் தடுமாறிக் கேட்டார். அதற்கு அமைச்சர்களிடமிருந்து பதில் இல்லை.

வன்னியர் சங்க சாலைமறியல் போராட்டத்திற்கு எதிராக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட அமைச்சர்கள் குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கூறினோம். எங்களின் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களால் மறுக்க முடியவில்லை. பதில் கூற முடியாமல் தடுமாறினார்கள்.

அதேபோல், காவல்துறை தலைவர் ஸ்ரீபாலும், அவரது காவலர்களும் செய்த அட்டூழியங்களையும் பட்டியலிட்டோம். வன்னியர்கள் மீது பொய் வழக்கு போடுவது அப்போதும் தொடர்வதாகக் கூறிய நான், அதே நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்தேன்.

எங்களுடன் பேச்சு நடத்தி ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே, அதாவது 1987 ஆம் ஆண்டு  டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் காலமானார். அதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 13% தனி இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, அதற்கான கோப்புகளை எம்.ஜி.ஆர் தயாரித்து வைத்திருந்தார்.
அவர் மட்டும் இன்னும் சில வாரங்கள் உயிருடன் இருந்திருந்தால் நமக்கு 13% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக எம்.ஜி.ஆர் மறைந்து விட்ட நிலையில், அதன்பின் சட்டத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ஒருவர் அந்த கோப்புகளை அழித்து விட்டதாகவும் தெரியவந்தது. எம்.ஜி.ஆர் நமது கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தாலும், இயற்கையின் சதியால் அப்போது நமக்கு சமூகநீதி கிடைக்கவில்லை” என்று பேசினார் ராமதாஸ்.

இதன் மூலம் 1987 இலேயே எம்.ஜி.ஆர். வன்னியர்களுக்கு 13% இட ஒதுக்கீடு அளிக்க தயாராக இருந்தார் என்பதை நினைவுபடுத்தி அதிமுக வாக்காளர்களை குறிப்பாக அதிமுகவில் இருக்கும் வன்னியர் சமுதாய வாக்காளர்களை அதிமுக நோக்கி திருப்ப முயற்சித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

தஞ்சை: என்ஐஏ சோதனையில் இருவர் கைது… காரணம் என்ன?

சென்னையில் களைகட்டிய வானவில் சுயமரியாதை பேரணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share