100 நாள் வேலை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. MGNREGA scheme central government explanation
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய சுமார் 3500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர்.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சோனியா காந்தியும் 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். “பாஜக தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது, கண்டனத்துக்குரியது.” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இன்று (மார்ச் 19) ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005- ஆனது திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயதுவந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் 2006-07-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.11,300 கோடியாக இருந்தது. இது 2013-14-ம் நிதியாண்டில் ரூபாய் 33,000 கோடியாக அதிகரித்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கீடு என்பது பட்ஜெட் மதிப்பீட்டு கட்டத்தில் இதுவரை இல்லாத மிக அதிகமான பட்ஜெட் ஒதுக்கீடாகும். கோவிட்-19 பெருந் தொற்றின்போது சிரமப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2020-21-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் சாதனை அளவாக அரசு ரூ.1,11,000 கோடியை செலவிட்டுள்ளது. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் அரசின் உண்மையான உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.
இதேபோல், 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடியாக இருந்தன. அதேசமயம், 2014-15 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 3029 கோடியாக உள்ளது. இது 2014-க்கு முந்தைய 10 ஆண்டை விட 82% அதிகமாகும். இந்த செயல்பாட்டில், கடந்த 2014-15 முதல் 2024-25 வரை, மத்திய அரசு 7,81,302 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதன் விளைவாக 8.07 கோடி கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006-07 முதல் 2013-14 வரையிலான முந்தைய பத்தாண்டுகளில், 2,13,220 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டு, 1.53 கோடி கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது. MGNREGA scheme central government explanation