2017ல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரத்னகுமார் எழுதி இயக்கியிருந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியாகியிருக்கிறது. இது பற்றிய தகவலை இயக்குநர் ரத்னகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முக்கிய திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக வருவது உலகெங்கிலும் உள்ள கலாச்சாரம், தமிழில் பாலு மகேந்திராவின் வீடு, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அஞ்சாதே, பிசாசு, தியாகராஜா குமாராஜாவின் ஆரண்ய காண்டம், கமல்ஹாசனின் ஹேராம், நவீனின் மூடர்கூடம் ஆகிய முக்கிய திரைப்படங்களின் திரைக்கதை புத்தகம் வெளியாகி சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது மேயாத மான் திரைப்படத்தின் திரைக்கதையும் புத்தகமாகி இருக்கிறது. ஒரு தலைக் காதல் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தாலும் யதார்த்த வாழ்வில் நிகழும் வர்க்க ரீதியான முரண்களை நகைச்சுவையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தது மேயாத மான். அதன்பிறகு இயக்குநர் ரத்னகுமார் 2019ல் அமலா பால் நடிப்பில் ஆடை என்ற வெற்றிப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். அதன் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார் ரத்னகுமார்.�,”