மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

Published On:

| By admin

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒகேனக்கலுக்கு கடந்த 2ஆம் தேதி 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 3ஆம் தேதி 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதற்கிடையே மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது ஆனாலும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல்களிலும் உற்சாகமாக சென்று இயற்கை அழகை கண்டுகளித்தனர். ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து இன்று சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 310 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் சரிந்து 5 ஆயிரத்து 9 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 105.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 106 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share