மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன சாகுபடிக்காக இன்று (ஜூலை 28) முதல் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிவதால், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 16-ஆம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், 11 நாட்களில் கிடுகிடுவென 60 அடி உயர்ந்து, நேற்று நீர்மட்டம் 100 அடியை கடந்தது.
அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற என்ற நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.47 லட்சம் கன அடியாக உள்ள நிலையில், டெல்டா மாவட்ட குடிநீர் தேவைக்கு தற்போது 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து காவிரி கரையோர மற்றும் டெல்டா பகுதியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலாளர் மணிவாசகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மதியம் 3 மணிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்படும் என்றும், நீர்வரத்தை பொறுத்து அடுத்த 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வில்லனாகும் அயன்மேன்… மார்வெல் ரசிகர்கள் மகிழ்ச்சி!
’காவிரி நீர்த்திறப்பிற்கு முன் இத செய்யுங்க’: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்!