டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் தேதியை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். Mettur Dam shutter open on june 12
ஆண்டுதோடும் ஜூன் மாதங்களில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
இதுதொடர்பாக இன்று (ஏப்ரல் 10) மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பாக அணையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்காக திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது,மேட்டூர் அணையில் 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அணை திறக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்படும். மீண்டும் பாசன காலம் முடிந்த பின்னர் அணையில் பணிகள் தொடங்கும்” என்று கூறினார்.
அணை திறக்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், கடைமடை வரையில் தூர்வாரும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1934 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை, குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும், ஆனால் கடந்த காலங்களில் பல முறை தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த தேதியில் திறக்கப்படவில்லை.
ஆனால் கடந்த 2020 முதல் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் தாமதமாக திறக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கூறியிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Mettur Dam shutter open on june 12