டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (மே 24) காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணை திறப்பு நாளான ஜூன் 12ஆம் தேதிக்கு முன்கூட்டியே திறக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மே 21ஆம் தேதி அறிவித்தது.
அணை திறப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இரவில் மேட்டூரில் தங்கிய அவர், இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்தார். பச்சை துண்டு, நெல்மணி உள்ளிட்டவற்றை வழங்கி விவசாயிகள் முதல்வரை வரவேற்றனர்.
காலை 11.15 மணியளவில் மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்து சீறிப் பாய்ந்து வந்த நீரை மலர்தூவி வரவேற்றார். முதற்கட்டமாக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் மூன்று நாட்களில் கல்லணையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன் கூட்டியே அணை திறைக்கப்பட்டதால், நாற்றங்கால் நடுவது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தந்திரத்துக்கு பின்னர் முதன்முறையாக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டுள்ளது.
