காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 90,500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி, காவிரியின் துணை நதியான கபினி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணைகள் நிரம்பியதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை தாண்டி ஒகேனக்கலுக்கு காவிரி நீரின் வரத்து வினாடிக்கு 1,05,000 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 90,500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
