பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று (மார்ச் 20) நள்ளிரவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. metro train testing success between poonamallee – mullai thottam
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் போரூர் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரையிலான வழித்தடம் 4-ல் சுமார் 2.5 கி.மீ தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று மாலை 6 மணியளவில் முதலில் நடத்தப்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரயில் செல்லும் தண்டவாளத்தில் மேலே உள்ள மின்சார கம்பிகள் அறுந்தது. அதனைத்தொடர்ந்து தண்டவாளத்தின் அருகே இருந்த மின்சாரப் பெட்டி வெடித்து தீப்பொறி கிளம்பியது. இதனால் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரயில் வழித்தடத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியையும், தொழில்நுட்ப கோளாறையும் சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
அடுத்த 7 மணி நேரத்தில் அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்ட நிலையில், இரவு 11.30 மணியளவில் மீண்டும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரையில் வெற்றிகரமாக ரயில் இயக்கப்பட்டது.
இந்த ஆண்டின் (2025) டிசம்பர் மாதத்திற்குள் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை வீடியோவாக வெளியிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.