கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 19) சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், மெட்ரோ ரயில் குறித்தான அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம் வரும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,
மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை 4,625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெறப்பட்டு, ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பிற்காக ஒப்புதல் கோரப்பட உள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலுமான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
தற்போதுள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டடம் அமைந்துள்ள பகுதியில், ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்டஅலுவலக வளாகம் ஒன்று 823 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இதில் அமையவுள்ள நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்திடத் தேவையான 200 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விரைவில் நெமிலி குடிநீர் நிலையம் : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
சின்னதம்பி பெரியதம்பி – ’டபுள் ஹீரோ’ படங்களுக்கான ‘ரோல்மாடல்’