தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் சட்டமன்றத் தலைவர் வன்னி அரசு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: ” முதலமைச்சர் தமிழ்நாட்டின் உரிமை மற்றும் தமிழர்களின் உரிமை என்கின்ற அடிப்படையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.இது வரலாற்று சிறப்பு மிக்க முன் மொழிவு. தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அத்தனை அரசியல் கட்சிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக மக்களும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இத்தீர்மானத்தை முழுமையாக வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
இயல்பாகவே, இந்தியாவின் கடைமடைப் பகுதியான தமிழ்நாடு வற்றாத ஜீவநதிகளைக் கொண்டிருக்கவில்லை. பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி எனப் பிற மாநிலங்களோடு நமது நீரியல் தேவைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய சூழலே நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக, நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற தொலைநோக்குக் கருத்தைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றே முன்வைத்திருந்தார். ‘ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் இல்லாதபோது, ஆறுகளுக்கும் மாகாண எல்லைகள் இருக்கக் கூடாது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டது, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பாயும் நதிகளுக்கு இது மிக முக்கியமாகப் பொருந்தும் என்கிறார் அம்பேத்கர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், கடந்த 2018 பிப்ரவரி 16 அன்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நீர்வளக் குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநர், மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசின் காவிரி நீர் வாரிய நிகம நிறுவனத்திற்கு அளித்த அனுமதி முதற்கொண்டே தமிழ்நாடு இதனைத் தொடர்ந்து உறுதியுடன் எதிர்த்து வருகிறது.
தமிழகத்தின் வேளாண் மக்களின் நலன் மட்டுமல்ல, கர்நாடக விவசாயிகளின் நலன் மீதும் அக்கறை இருக்கிறது. எனினும், முதலமைச்சர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையின் வேறு எந்த இடத்திலோ, பிற படுகை மாநிலங்களின் இசைவின்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டிய ஒன்றிய அரசு, இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே, கடந்த 21.03.2022 அன்று இதே பேரவையில் இதே பொருள் குறித்துக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளது. தமிழர் உரிமை காக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று அவர் பேசினார்.
