தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, இரு மாநிலங்களுக்கும் இடையேயான தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 22) மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
அப்போது திருத்தப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பான அரசின் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு அதிமுக ,பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருத்தம் செய்தால் அதை முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதற்கு விளக்கம் அளித்தார்.
“மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் முதலில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் திமுக கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முடிவை எடுத்தது. அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் இந்த அவையின் முன்பு ஒரு கோரிக்கை வைத்தார்.
தீர்மானத்தில் ஆணையம் என்று குறிப்பிடுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். சட்ட நிபுணர்களின் அறிவுரைப்படி தான் இது மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவருடைய அந்த திருத்தத்தையும் நாம் ஏற்றுக் கொண்டோம்.
நம்முடைய முக்கிய குறிக்கோள் விவசாயிகளை பாதுகாப்பதும் காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பதும் ஆகும். இதில் வேறு எந்தவித வேறுபாடும் கிடையாது.
காவிரி உரிமையை பாதுகாக்க திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றன. குடிநீருக்கு எனக் கூறி மேகதாது அணை கட்டி சட்ட சிக்கலை ஏற்படுத்த கர்நாடக அரசு பார்க்கிறது.
கர்நாடகா காவிரி விவகாரத்தில் தனது உத்தியை மாற்றி உள்ளது. திட்ட அறிக்கை கொடுக்க சொல்லி கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்து விட்டோம். நாமும் சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தலின்படி புதிய நடுவர் மன்றம் அமைக்க தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். நீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் இருக்கிறது. அணை கட்டும் பணி என்பதால் புதிய ஆணையம் தேவை” என்று கூறினார்.
