தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஜூன் 19) தனது முதல் தனித்தீர்மானத்தை அவையில் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்துள்ள அரசினர் தனித்தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முழு மனதோடு வரவேற்கிறோம். காவிரி என்பது வெறும் நதி மட்டுமல்ல, அது தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்நாடி. காவிரி நீரை நம்பித்தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையும், ஒட்டுமொத்த விவசாயமும் இயங்கி வருகிறது. காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
காவிரி நீரைத் தமிழகத்திற்கு வழங்குவது குறித்து காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை மூன்று வழிகளில் கர்நாடகா வழங்க வேண்டும். கபினி அணை மூலமாகக் கபினி ஆற்றில் 60 டி.எம்.சி-யும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 52 டி.எம்.சி-யும், கபினி அணையிலிருந்து பிலிகுண்டு வரை 240 கிலோமீட்டர் தூரம், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து பிலிகுண்டு வரை 200 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம், கர்நாடகாவின் தடைப்படுத்தப்படாத நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து 80 டி.எம்.சி வழங்க வேண்டும். இதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 14.75 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா குறைத்துக் கொள்கிறது.
ஆனால், நடைமுறையில் மேலே உள்ள இரு அணைகளின் முழுக்கொள்ளளவும் நிரம்பிய பின்னர்தான் கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்தச் சூழலில், தடைப்படுத்தப்படாத பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரைத் தடுத்து, 4 கிலோமீட்டர் முன்பாக 67.15 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை அவர்கள் கட்ட முயல்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்.
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தவறான செயலாகும். சுமார் 67 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் இந்த மேகதாது திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏற்கனவே தண்ணீர் இன்றிப் போராடும் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். அதுமட்டுமன்றி, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் பெற்று வரும் தமிழகத்தின் பல மாவட்ட மக்களின் குடிநீர் உரிமையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கர்நாடக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், காவிரி நீர்ப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக நிற்கும். எனவே, மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழக உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் பேசினார்.
