மீண்டும் மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்!

சினிமா

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரன்ட் பிறப்பித்து இன்று (ஆகஸ்டு 6)  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாடலிங் துறையில் பிரபலமானவரான மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 2019 ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர். ரஜினி, விஜய், சூர்யா, ஜோதிகா, த்ரிஷா போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக கருத்துக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர்.

அந்த வகையில் திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார் நடிகை மீரா மிதுன்.

இதுதொடர்பாக மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தது.

பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு இன்று(ஆகஸ்ட் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் சாட்சிகளும், மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக்கும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர்  ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏற்கனவே இதேபோல தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

மீண்டும் பார்த்திபனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.