காரைக்காலில், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சிறுவனுக்கு சரியான சிகிச்சை தான் அளிக்கப்பட்டதா என்று மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டைச் சேர்ந்த ராஜேந்திரனின் 2-வது மகன் பாலமணிகண்டன்.
கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலை நிகழ்ச்சியிலும் சிறந்து விளங்குபவராகவும் இருந்தார்.
அவர் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற இருந்ததால் அதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடந்துவந்தது. அதன்படி ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மதியம் வீட்டுக்கு சென்ற மணிகண்டன், தாய் மாலதியிடம் எனக்கு பள்ளியில் குளிர்பானம் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டுள்ளார்.
மேலும் பேசிக்கொண்டிருக்கும் போதே பாலமணிகண்டன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக பாலமணிகண்டனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாலமணிகண்டனுடன் வகுப்பில் படிக்கும் மாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரி விக்டோரியா, விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி தேவதாஸ் மூலம் பாலமணிகண்டனின் பெற்றோர் கொடுத்ததாக கொடுக்குமாறு கூறி விட்டு சென்றுள்ளார்.

இந்த குளிர்பானத்தை குடித்தபிறகே மணிகண்டன் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தனது மகள் அருள்மேரிக்கும், பாலமணிகண்டனுக்கும் இடையே படிப்பில் கடும் போட்டி நிலவியது.
கலைநிகழ்ச்சியிலும் மாணவனே முன்னிலை வகித்ததால் ஆத்திரமடைந்த சகாயமேரி, மாணவன் பாலமணிகண்டனை பழி தீர்க்க திட்டம்போட்டார். அதன்படி பள்ளிக்கு சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
காரைக்கால் டவுன் போலீஸ் சகாயமேரி விக்டோரியாவை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 3 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு சிறுவன் பால மணிகண்டன் சற்று தெளிவாகவே பேசியிருக்கிறார். ஆனால் நள்ளிரவில் அவர் திடீரென்று மரணமடைந்தார்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே மரணத்திற்கு காரணம் என்று கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜர் சாலையில் அவர்கள் மறியலும் செய்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை வாங்கி பெற்றோர் அடக்கம் செய்தனர். அதனடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி இன்று (செப்டம்பர் 6) சிறுவனுக்கு சிகிச்சை அளித்த காரைக்கால் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் குழு, என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பிறகு சிகிச்சை விவரங்கள் குறித்து சுகாதாரத் துறை இயக்குநரிடம் அறிக்கை அளிக்கப்பட்டு தவறு இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா
மாணவன் நன்றாகப் படித்ததால் ஆத்திரம்: குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்!
