மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
அவர் கடந்த வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில் தனது நண்பருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவியை மருத்துவமனையின் பின்புறத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியுடன் சென்ற ஆண் நண்பர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கூறப்படும் நிலையில் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
