அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: தாமதப்படுத்தும் ஆளுநர்?

Published On:

| By Balaji

இட ஒதுக்கீடு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு கடந்த 15ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தமிழக அரசின் அவசர சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் சட்ட ஆலோசனை கேட்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்திருப்பதாகவும், ஆலோசனை கேட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அவசர சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, அது பற்றி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்ததாகவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாகவும், இவ்வளவுக்குப் பிறகும், மீண்டும் ஒருமுறை சட்ட ஆலோசனை பெறப் போவதாகக் கூறி அவசரச் சட்டம் பிறப்பிப்பதை ஆளுநர் அலுவலகம் தாமதப்படுத்துவது நியாயமற்றது எனவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும், மருத்துவப் படிப்பில் தேவையான மதிப்பெண்கள் பெறுவதற்கும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இது சாத்தியப்படாது என்று கூறியுள்ள அவர்,

ADVERTISEMENT

“இத்தகைய சூழலில், அரசு பள்ளி மாணவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி ஆகும். தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுநர் துணையாக இருக்க வேண்டுமே தவிர, தேவையற்ற தாமதம் செய்து தடையாக இருக்கக்கூடாது. ஆகவே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share