சமீப காலமாக நம் உணவில் மீல் மேக்கரை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அசைவ உணவு பிரியர்களின் மாற்று உணவாகப் பயன்படுத்தும் இந்த மீல் மேக்கரில் வறுவல், பொரியல் என்று பலவிதமான உணவு வகைகள் செய்து அசத்துகிறோம். அப்படிப்பட்ட மீல் மேக்கரில் சுவையான குழம்பும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
- மீல் மேக்கர் (சோயா) – முக்கால் கப்
- சின்ன வெங்காயம் – அரை கப்
- பூண்டு – 10 பல்
- தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
- சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன்
- புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)
- உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
அரைக்க…
- தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரி – 10
தாளிக்க…
- கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
- பெருங்காயம் – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
முதலில் இரண்டு கப் கொதிக்கும் நீரில் உப்பு, மீல் மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதைப் பிழிந்தெடுத்து, நான்கு முறை தண்ணீரில் அலசி மீண்டும் பிழிந்து எடுக்கவும். பூண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். சற்று வதங்கியதும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல் ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை குழம்பைக் கொதிக்க வைக்கவும். மீல் மேக்கர், அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சோயா உருண்டைகளில் குழம்பு சேர்ந்து கெட்டியானதும் இறக்கவும்.