eஅதிகாரிகளுக்கு நூதன முறையில் விருது !

Published On:

| By Balaji

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளை பாராட்டி இதுவரை யாருமே வழங்காத விருதுகளை அளித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த துரை குணா ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர். கறம்பக்குடி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம், கட்டுமானங்களை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்று அதற்கான ஆணையும் பெற்றார். ஆனால், இதுவரை அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு நூதன முறையில் விருது வழங்கப் போவதாக நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் “ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் மாண்புமிகு நீதியரசர்கள் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத துணிச்சல் மிக்க அதிகாரிகளை பாராட்டி கெளரவிக்கும் விதமாக விருது வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு குட்கா அமைச்சரின் ஸ்லீப்பர் செல் விருதும் ‘இரண்டு பாக்கெட் தோசைமாவு’.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு ’எடப்பாடியார் விருதும் ’பருப்பு கடையும் மத்தும்’

உதவி கோட்டப் பொறியாளருக்கு தர்மயுத்தம் பன்னீர் விருது ’சிட்டுக்குருவி லேகியம்’

உதவிப் பொறியாளருக்கு ‘சொல் அகராதியின் தந்தை எச். ராஜா விருது, மற்றும் ’மூலம், பவுத்திரம் வைத்திய குறிப்புகள் அடங்கிய கையேடு’

வழங்கி கெளவுரவிக்கப்படுகிறது. பின்குறிப்பில், எடப்பாடியார் விருது பெறுவோர் கண்டிப்பாக தவழ்ந்து வந்து வாங்கக் கூடாது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு புகாரையும், மனுவையும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த போஸ்டர் ஒட்டப் போவதாக மாவட்ட எஸ்.பிக்கு அனுமதி கேட்டு மனுவை தபாலில் அனுப்பி விட்டேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் தெரியவில்லை. இதற்காக நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று துரை குணா கூறினார்.

ஏற்கனவே, இவர் அதிகாரிகளுக்கு சட்டம் தொடர்பான வகுப்புகள் எடுக்கப் போவதாக போஸ்டர் அடித்ததும், அரசு அலுவலர்களைக் கண்டித்து அவர்கள் குறித்து போஸ்டர் ஒட்டப் பசை கேட்டும் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share