சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 28) கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பெயரில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். இதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தேன்” என்றார்.
மேலும் அவர், “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரண்டாவது சுற்றுக்கு எப்போது அழைக்கிறார்களோ… அப்போது சென்று பேசுவோம். என்னால் இப்போது எதையும் சொல்லமுடியாது. நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அதுதான் எங்கள் நிலைபாடு. இதை அவைதலைவர் சொல்லிவிட்டாரே. தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை” என்றார்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்த கேள்விக்கு, “ யார் வந்தாலும் நண்பராவோம்” என்றார்.
மோடி எத்தனை முறை காவடி தூக்கினாலும், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது. பாஜகவால் தமிழகத்தை ஏமாற்ற முடியாது” எனவும் குறிப்பிட்டார்.
