தற்கொலைக்கு முயன்று கோவை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இன்று (மார்ச் 28) சிகிச்சை பலனின்றி காலமானார்.
மதிமுக தூண்களில் ஒருவரான கணேசமூர்த்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால், கடந்த மார்ச் 24-ஆம் தேதி காலை 10.15 மணியளவில் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் ‘சல்பாஸ்’ எனப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை அருகிலுள்ள சுதா மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு தொடர்ந்து ஐசியூவில் விஷ முறிவுக்கான எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் கோவை மருத்துவமனைக்கு சென்று கணேசமூர்த்திக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்தநிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று அதிகாலை 5.05 மணிக்கு காலமானார். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விரைந்துள்ளார். கணேசமூர்த்தி மறைவு மதிமுக நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட மதிமுக வெளியிட்ட அறிக்கையில், “மதிமுக மூத்த தலைவரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி இன்று (28-03-2024) காலை 5.05 மணியளவில் உடல் நல குறைவின் காரணமாக கோவை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்கு கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூடியூப்: அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடு எது தெரியுமா?