“விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்’.
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த விஜய் மில்டனுக்கு அதிர்ச்சியாக இருந்ததாக வீடியோ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகள் வைத்து தான் படத்தை உருவாக்கி இருந்தேன்.
ஆனால் படம் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது.
படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். சென்சார் பண்ண ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற காட்சி வருகிறது.
யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது என தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படத்தை பாருங்கள் என வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட பின் ஒரு பிரேம் கூட கூடுதலாக இணைக்க கூடாது. அப்படி இணைக்கப்பட்டு இருந்தால் படம் தணிக்கை குழுவால் தடை செய்யப்படும்.
தணிக்கை சான்றிதழில் குறிப்பிட்ட கால அளவு திரைப்படத்தை பல கட்ட சரிபார்த்தலுக்கு பின்னரே டிஜிட்டல் நிறுவனங்கள் திரையரங்குக்கு அனுப்ப தங்கள் சர்வரில் பதிவு செய்வார்கள்.
தணிக்கை முடிந்த பின் இயக்குநர், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் படத்தை பார்ப்பது வழக்கம். இந்த நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த இயக்குநர் தனக்கு தெரியாமல் ஒரு நிமிட காட்சியை இணைத்து விட்டதாக கூறுவது படம் பற்றி பரபரப்பான செய்தி ஊடகங்களில் வெளியாக வேண்டும் என்கிற நோக்கமாக இருக்கலாம் என்கின்றனர் சினிமா பத்திரிகையாளர்கள்.
நேற்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
இதில் இயக்குநர் விஜய் மில்டன் கலந்து கொண்டு படம் முடிந்த பின் பத்திரிகையாளர்களிடம் படம் எப்படி இருந்தது என கலந்துரையாடினார்.
பலமில்லாத திரைக்கதை, விஜய் ஆண்டனியின் ஸ்டீரியோடைப்பான நடிப்பு சினிமா பார்வையாளர்களை கவரவில்லை என்பதுடன் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு பார்வையாளர்கள் வருகை மிக மந்தமாகவே இருந்தது.
இதனால் படம் பற்றிய பரபரப்பான செய்தி ஊடகங்களில் வெளியாக வேண்டும் என்கிற இயக்குநர் – தயாரிப்பாளர் கூட்டு திட்டம் என கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பில் இன்று காலை 12 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்ததை ரத்து செய்திருப்பது.
ஒருவேளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதாலயே பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாக இயக்குநர் வட்டார தகவலாக இருக்கிறது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா உணவு மிகை நாடு : வேளாண் மாநாட்டில் மோடி பேச்சு!
“அவர்களே ஒரு பேரிடர்தான்” : பாஜக அரசை விமர்சித்த கனிமொழி
அருந்ததியர் 3% இடஒதுக்கீடு… ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!
பத்திரிகையாளர் நல வாரியத்தில் டிஜிட்டல் ஊடகத்தினர்… அரசுக்கு கோரிக்கை!
