சிபி ராதாகிருஷ்ணனுக்கு போட்டியாக மயில்சாமி அண்ணாதுரை இந்தியா கூட்டணி வேட்பாளர்? இன்று முடிவு!

Published On:

| By Kavi

என்டிஏ கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி.

எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் நேற்று மாலை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் திமுக சார்பில் எம்பி கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் இரண்டாவது நாளாக இன்று மதியம் 12:30 மணியளவில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழர் என்ற முறையில் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜகவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தனது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல திமுக தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று நம்புவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு போட்டியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் குறிப்பாக கொங்கு மாவட்டமான கோவையைச் சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி- சந்திரயான் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரையை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வருகின்றன.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share