மயிலாடுதுறை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுக புள்ளிகளை அதிமுகவினரும், பாமகவினரும் விலை பேசி வருவதாக திமுகவின் ஆலோசனைக் கூட்டத்திலேயே பரபரப்பாக புகார் சொல்லப்பட்டிருக்கிறது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக சுதா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார். பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன் இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை கூட்டி அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் எந்தெந்த ஏரியாவில் என்னென்ன தேவை, எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் வியூகத்தை எப்படி முறியடிப்பது என்பது பற்றி விவாதிக்கிறார்கள்.

இந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் திமுகவினரை பாமகவினரும், அதிமுகவினரும் விலைக்கு வாங்குவதாக பரபரப்பாக விவாதம் நடந்திருக்கிறது.
இதுகுறித்து மயிலாடுதுறை திமுகவினரிடத்தில் பேசினோம்
“மயிலாடுதுறை தொகுதி ஏற்கனவே திமுகவினரிடம் தான் இருந்தது. ஆனால், இம்முறை அதை காங்கிரசுக்கு ஒதுக்கினார்கள். அதுவும் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முதல் நாள் தான் வழக்கறிஞர் சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே தொகுதி திமுகவுக்கு இல்லை என்பது ஒரு ஏமாற்றம், காங்கிரஸிலும் லோக்கல் வேட்பாளர் இல்லை என்பது அடுத்த ஏமாற்றம். இப்படிப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சென்னையில் இருந்து வேட்பாளர் சுதா இறக்குமதி செய்யப்பட்டார்.
ஆனால், பாமக சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் அறிமுகம் பெற்றவர். நீண்ட காலமாக வன்னியர் சங்கத்தில் இருப்பவர். அதேபோல அதிமுக வேட்பாளரான பாபுவின் தந்தை பூம்புகார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பவுன்ராஜ். அவர் தனது பூம்புகார் தொகுதியில் அதிக ஓட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

திமுக கூட்டணியில் சீட் காங்கிரஸுக்கு போனதும், காங்கிரஸார் வேட்பாளர் அறிவிக்க நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டதும் பாமகவுக்கும், அதிமுகவுக்கும் திமுகவில் இருக்கும் தங்கள் வன்னிய உறவுகளோடு டீலிங் பேச மிகவும் வாய்ப்பாகிவிட்டது.
பூம்புகார் தொகுதியில் பவுன்ராஜும், மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் பாமகவும் திமுகவில் இருக்கும் வன்னிய பிரமுகர்களோடு நேரடியாகவே வீடு தேடிச் சென்று கையை பிடித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் கூடிய தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டத்தில் இதெல்லாம் மாசெ நிவேதா முருகனுக்கு எதிராகவே வெடித்துள்ளது.
சில நிர்வாகிகளின் கருத்துகளுக்கு பதில் சொன்ன மாசெ நிவேதா முருகன், ‘ சில இடங்கள்ல நம்ம ஆளுங்களே விலை போறாங்க’ என பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார்.

உடனே மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் போன்றவர்கள் மாசெ நிவேதா முருகனை அட்டாக் செய்ய ஆரம்பித்தனர். ‘பல பேரு திமுகவுக்கு உசிரை கொடுத்து உழைச்சிக்கிட்டிருக்கோம். ஆனா பொத்தாம் பொதுவா விலை போறாங்கனு பேசுறீங்க. விலை போறதுல்லாம் நீங்க வளர்த்த ஆளுங்கதானே… நாங்க ஆரம்பத்துலயே சொன்னோம். ஆனா அதையெல்லாம் கேட்காம நீங்கதான் பாமக காரங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தீங்க. அவங்களை திமுகவுக்கு அழைச்சுட்டு வந்து பொறுப்பும் கொடுத்தீங்க, கான்ட்ராக்டும் கொடுத்தீங்க. இப்ப தேர்தல்னு வந்தவுடனே அவங்க சாதிக்குதான் வேலை செய்யுறாங்க.
மயிலாடுதுறை நகர செயலாளர் குண்டாமணியோட குடும்பத்துலயே பாமகவுக்குதான் வேலை செய்யுறாங்க. பூம்புகார் ஒன்றியத்தை மூணாப் பிரிச்சு செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம்னு உருவாக்கி பாமகவுலேந்து, பாஜகவுக்கு போயி அங்கேர்ந்து திமுகவுக்கு வந்த அமிர்த விஜயகுமாருக்கு கொடுத்தீங்க. காரணம் என்ன? அவர் உங்களுக்கு சொந்தம்குறதாலதான?
இன்னிக்கு ஆதீனத்தை மிரட்டின கேஸ்ல அகோரத்தோட மாட்டி அவர் வெளியே இருந்தாலும் முழுசா செயல்பட முடியாம இருக்காரு. அந்த ஒன்றியத்துலதான் இப்ப திமுக நிர்வாகிகள்கிட்ட பாமக காரன் புகுந்து விளையாடுறான். அங்க ஒரு ஒரிஜினல் திமுக காரன் ஒன்றிய செயலாளரா இருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?” என்று வெடித்திருக்கிறார்கள்.
இப்படி பல இடங்களில் அதிமுகவினருக்கும், பாமகவினருக்கும் திமுகவினர் சாதி ரீதியாக உடன்பட்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் தொகுதியில் திமுக வேட்பாளர் இல்லை, காங்கிரஸ் வேட்பாளர் வன்னியராக இருந்தாலும் அவர் லோக்கல் வன்னியராக இல்லை என்பதுதான்.
இந்த பிரச்சினைகள் மூலம் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவின் வெற்றிக்கு பாதிப்பில்லை என்றாலும்… தேர்தலுக்குப் பின் திமுகவில் பலத்த மாற்றத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்கிறார்கள் மயிலாடுதுறை சீனியர் திமுகவினர்.
இதுபோன்ற உட்கட்சி குழப்பங்களாலும், வேறு சில பிரச்சினைகளாலும் காங்கிரஸ் வேட்பாளருக்கான வாக்கு 3% வரை குறையலாம் என்றும், ஆனால் வெற்றிக்கு பாதிப்பில்லை என்றும் திமுகவின் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
