மே 6: ஸ்டாலினுக்காகக் குறித்த தேதி!

Published On:

| By Balaji

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிறகான கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு ஊடக நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து வெளியிடாமல் வைத்துள்ளன. இதேபோல கட்சிகளும் தங்களுடைய தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனங்கள் மூலமும் தனியார் ஏஜென்சிகள் மூலமும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த வகையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ரிபப்ளிக் டிவிக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த கட்சிகளும் சேர்ந்து 50 இடங்களுக்கு மேல் பெறாது’ என்று தனது கணிப்பைச் சொல்லியிருக்கிறார்.

திமுக கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டிய பெரும் எண்ணிக்கையைப் பெறும் என்றும் அவர் திமுக தலைமைக்குத் தகவல்களுடனும் ஆய்வு விவரங்களுடன் எடுத்துச் சொல்லியுள்ளார்.

ADVERTISEMENT

இப்படிப் பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் திமுக ஆட்சியமைக்கும் என்ற தகவல் அக்கட்சியின் தலைமைக்குக் கிடைத்து வருவதால் இந்த இடைப்பட்ட காலத்தில்… அடுத்த புதிய அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார், யார் என்ற ஆலோசனையில் தீவிரமாக இருக்கிறது திமுக தலைமை.

இதைவிட ஒருபடி மேலாக மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு என்றைக்கு எந்த இடத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என்ற ஆலோசனையும் தீவிரமாகி விட்டது.

ADVERTISEMENT

அதன்படி மே 6ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திமுக அரசு பதவியேற்பதற்கான ஆயத்தங்களை இப்போதே செய்துவருகின்றனர்.

மேலும் தற்போது ஸ்டாலின் வசித்து வரும் சித்தரஞ்சன் சாலை இல்லத்தைவிட அமைச்சர்கள் குடியிருப்பு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் பங்களாக்களில் ஒன்றிலேயே ஸ்டாலின் வசிக்கலாம் என்றும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share