AUSvsAFG: உலக கிரிக்கெட் வரலாற்றில் நேற்று (நவம்பர் 8) நடைபெற்ற ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்க கூடியதாக இருக்கும் என்பதை யாருமே போட்டி தொடங்குவதற்கு முன் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். Maxwell painful double century
ஆனால் போட்டி தொடங்கியதில் இருந்து முடிந்தது வரை கடந்த ஒவ்வொரு தருணமும் ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு தனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத அனுபவத்தையும், பாடத்தையும் கொடுக்க கூடியது என்றால் மிகையல்ல.
வெற்றியின் கட்டாயத்தில் மோதல்!
அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவும், உலகக்கோப்பையில் முதன்முறையாக மூன்று தொடர் வெற்றிகளை பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இப்ராஹிம் சார்தான் 129 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் முதல் சதம் கண்ட ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார் சார்தான்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி!
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தொடந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் வலியை கொடுத்தனர் ஆப்கான் பவுலர்கள்.
முதல் 10 ஓவருக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவருக்குள் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது.
இந்த நிலையில் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் அணியின் கெளரவமான தோல்விக்கு போராடினர்.
இதற்கு இடையே 30 ரன்களில் கொடுத்த எளிதான கேட்சை ஆப்கான் வீரர் முஜிபுர் ரஹ்மான் தவற விட்டார்.
அப்போது யாருக்கும் தெரியாது இதற்காக பெரும் தோல்வியை ஆப்கான் அணி சந்திக்கப்போகிறது என்று.
கேட்ச் கண்டத்திலிருந்து தப்பித்த மேக்ஸ்வெல், அதன்பின்னர் தனது பேட்டை ராக்கெட் வேகத்தில் சுழற்றினார். அணியின் ஸ்கோரும் அதற்கேற்றவாறு ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஒற்றை ஆளாய் பவுண்டரியும், சிக்ஸருமாய் பறக்க விட்ட மேக்ஸ்வெல், 50, 100, 150 என தன்னுடைய சிறந்த இன்னிங்ஸை விளையாடியதும் அல்லாமல் அணியின் தோல்வியின் பிடியில் இறுகி போயிருந்த ஆஸ்திரேலியா ரசிகர்களின் முகத்தையும் வேகமாக மாற்றி கொண்டிருந்தார்.
வலியிலும் வெற்றிக்காக போராட்டம்!
இதற்கிடையே 126 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெலுக்கு தொடையில் தசைபிடிப்பும், முதுகில் வலியும் தொற்றிக்கொண்டது.

காயம் கருதி போட்டியில் இருந்து விலகினால், அணியின் தோல்வி நிச்சயம். களத்தில் ஓடக்கூட முடியாத நிலை… இப்படிப்பட்ட நேரத்தில் போர்களத்தில் ஒரு வீரர் என்ன செய்வார்? அதனை தான் ஆடுகளத்தில் செய்தார் மேக்ஸ்வெல்.
ஆம் ஓட முடியாது… உடலை வளைத்து அடிக்க முடியாது… அவ்வளவு தானே… கையில் வலு இருக்கிறது… மனதில் உறுதி இருக்கிறது… புத்தியில் வெற்றி பெற தெளிவான திட்டம் இருக்கிறது. அதனை அப்படியே பிரதிபலித்தார் மேக்ஸ்வெல்.
வெற்றியோ, தோல்வியோ.. சண்ட செய்யனும் என்று ரீதியில் விளையாடிய மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும், 10 இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.
கேப்டன் பாட் கம்மின்ஸ் 68பந்துகளை சந்தித்து வெறும் 12 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழாக்காமல் விளையாடியதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இதனால் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 293 எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் அபார சாதனை!
தனது அபாரமான ஆட்டத்தால் அணியின் வெற்றியை உறுதி செய்த மேக்ஸ்வெல் பல சாதனைகளை படைத்துள்ளார்.

அதன்படி உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங்கில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் (201*) அடித்தது இதுவே அதிகமாகும்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா வீரர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோரையும் மேக்ஸ்வெல் தற்போது பதிவு செய்துள்ளார்.
தொடக்க வீரர் அல்லாத வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். Maxwell painful double century
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
