மத்தகம் – விமர்சனம்!

Published On:

| By Monisha

maththagam web series review

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் சமபலம்

ஒரு வெப்சீரிஸை பார்ப்பதென்பது அலாதியான அனுபவம். வானில் இருந்து கீழே உதிரும் மழைத்துளி மெல்ல நம் உடல் மேல் பட்டு சிலிர்ப்பை உண்டாக்குவதற்கு ஒப்பானது அது. நம் மனநிலையைத் தன்வசப்படுத்தும் அந்த ஜில்லிப்பின் அடிப்படை எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அந்த உணர்வு மேலெழுந்தவாறே இருக்க வேண்டுமே தவிர, சற்றும் கீழே இறங்கிவிடக் கூடாது.

அப்படியொரு நிபந்தனையை மனதிற்குள் நிறைத்துக்கொண்டு, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மத்தகம்’ சீரிஸ் முதல் பாகம் பார்த்தேன். அதன்பிறகு, என்னமாதிரியான அனுபவம் கிடைத்தது?

பார்ட்டிக்கு போகலாமா?

தலைமறைவாகத் திரிகிற ரவுடி சங்கு கணேசன் (மூணாறு ரமேஷ்), முகம் தெரியாத ஒரு ரவுடி நடத்தும் விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காகத் தனது ஆட்களுடன் கிளம்புகிறார். போலீஸ் நடமாட்டத்தைக் கண்காணித்தபிறகே, அவரது பயணம் நிகழ்கிறது.

அதே நேரத்தில், வீட்டில் மனைவி வைதேகியை (நிகிலா விமல்) எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகிறார் உதவி கமிஷனர் அஸ்வத் (அதர்வா). வைதேகி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து சில நாட்களே ஆகின்றன. அதனால், வீட்டில் நிறைந்திருக்கும் தாய்ப்பால் வாசம் அஸ்வத்தை ஒவ்வாமைக்கு உள்ளாக்குகிறது; மனைவி மற்றும் குழந்தையின் அருகாமையைத் தவிர்க்கச் செய்கிறது.

அந்த குறிப்பிட்ட நாளன்று, அவர்களுக்கு இடையிலான முரண் பெரிதாகிறது. அதனைத் தவிர்க்க, ’ஒரு எமர்ஜென்ஸி’ என்று பொய் கூறிவிட்டு இரவு ரோந்துக்கு செல்கிறார் அஸ்வத். அந்த நேரத்தில், அவரிடம் சங்கு கணேசன் மாட்டிக்கொள்கிறார்.

‘ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளச் செல்கிறேன்’ என்று கணேசன் சொல்ல, ‘அதனை நடத்துவது யார்’ என்று அஸ்வத் கேட்கிறார். ‘தனசேகர்.. பட்டாளம் சேகர்’ என்று அவர் பதில் சொல்கிறார்.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பே மும்பையில் நடந்த விபத்தொன்றில் பட்டாளம் சேகர் இறந்துவிட்டதாக காவல் துறை ஆவணங்களில் பதிவாகியிருக்கும் நிலையில், சங்கு கணேசனின் வாக்குமூலம் புதிய திசையைக் காட்டுகிறது. அதன்பிறகு, பட்டாளம் சேகரைக் கையும் களவுமாகப் பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் அஸ்வத். அதற்காக, ஒரு சிறப்புக்குழுவை அமைக்க சென்னை கமிஷனர் சயந்திகாவின் (தில்னாஸ் இரானி) உதவியை நாடுகிறார்.

பட்டாளம் சேகரோடு அமைச்சர் வீரவேல் நலங்கிள்ளிக்குத் (இளவரசு) இருந்த தொடர்பை மனதில் கொண்டு, முதலில் அவர் தயங்குகிறார். அதன்பிறகு, ஒருவழியாகச் சம்மதிக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ’பார்ட்டிக்கு போலாமா’ என்று பட்டாளம் சேகரைச் சந்திக்கக் காத்திருக்கும் ரவுடிகள் அத்தனை பேரும் அஸ்வத் குழுவின் பார்வைக்குள் வருகின்றனர். அதேநேரத்தில், காவல்துறையில் அமைச்சருக்கு விசுவாசமாக இருக்கும் சிலரது உதவியால், போலீஸ் குழுவினரின் செயல்பாடுகள் சேகருக்குத் தெரிய வருகிறது.

இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெற்றி பெற்றது யார் என்ற பதைபதைப்பை உண்டுபண்ணுகிறது ‘மத்தகம்’. சமபலம் கொண்ட ஹீரோவும் வில்லனும் நேருக்குநேர் பார்க்காமல் மோதிக்கொள்வதாக அமைக்கப்பட்ட காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யப்படுத்துகின்றன. இந்த முதல் பாகத்தில் ஐந்து எபிசோடுகள் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அதனால், ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தின்போது அந்தரத்தில் நின்றுவிட்ட அனுபவமே நமக்குக் கிடைக்கிறது.

வெப்சீரிஸின் பலம்

சின்னச்சின்ன பாத்திரங்களில் நடிப்பவர்களையும் நினைவில் கொள்ள வைப்பதே ஒரு வெப்சீரிஸின் பலம். அதற்கு ஏற்றவாறு கதையும் காட்சியமைப்பும் அக்கதாபாத்திரங்களின் இருப்புக்கான தேவையும் அமைய வேண்டும். ‘மத்தகம்’ சீரிஸில் அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன். போலவே, ஒவ்வொரு பாத்திரத்தையும் மனதில் பதிய வைக்கும் வகையில் ‘காஸ்ட்டிங்’ அமைந்திருக்கிறது.

இந்த சீரிஸில் அஸ்வத் ஆக அதர்வாவும், பட்டாளம் சேகராக மணிகண்டனும் நடித்துள்ளனர். காக்கி உடையில் அதர்வாவைத் தொடர்ந்து பார்த்து வரும் காரணத்தால், இவர்களது பாத்திரங்களை இடம் மாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, இருவருமே தங்களுக்குத் தரப்பட்ட பாத்திரத்தை நேர்த்தியாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அதர்வாவின் ஜோடியாக நிகிதா விமலும், மணிகண்டன் ஜோடியாக திவ்யதர்ஷினியும் நடித்துள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தென்படும் குரல் தழுதழுப்பு மணிரத்னம், கௌதம் மேனன் படங்களை நினைவூட்டுகிறது.

அமைச்சராக வரும் இளவரசு, பெண் கமிஷனராக வரும் தில்னாஸ் இரானி, அவரது கணவராக வரும் கௌதம் மேனன், அஸ்வத் வீட்டில் வேலை செய்பவராக வரும் வடிவுக்கரசி, சேகரின் நண்பன் கணநாதனாக வரும் ரிஷிகாந்த், திருநாவுக்கரசு, நந்தினி மாதேஷ், சரத் ரவி, மூணாறு ரமேஷ், பாண்டி ஜீவா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

குறிப்பாக, மாவா சேட் பாத்திரத்தில் நடித்த சிசர் மனோகர், ஜெயில் குயில் ஆக வரும் ஜான் சுந்தர், கவுன்சிலராக வரும் முரளி அப்பாஸ், ரவுடிகளில் ஒருவராக வரும் டவுட் செந்தில் என்று சேகர் கேங்கில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் திரையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இதுவரை பெரிதாகக் கவனிக்கப்படாத பாத்திரங்கள் கூட, இரண்டாம் பாகம் வரும்போது ரசிகர்களை ஈர்க்கக்கூடும். அந்த வகையிலேயே, எதிர்பார்ப்புக்கு மாறாகத் திரைக்கதை நகர்கிறது.

இந்த சீரிஸில் இயக்குனர் பிரசாத் உடன் இணைந்து கல்யாண்தத் பாண்டி எழுத்தாக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு எபிசோடிலும் டைட்டிலுக்கு முன்னால் என்னென்ன காட்சிகளைக் காட்டுவது என்று முடிவெடுத்த வகையில், அவர்களது தனித்துவம் பளிச்சிடுகிறது. வசனங்களும் கூட சில இடங்களில் ‘பஞ்ச்’ ரகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இரவில் நடக்கும் கதை என்பதால் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. முதல் காட்சியில் மூணாறு ரமேஷ் காரில் அமர்ந்திருப்பதைக் காட்டும் விதமே அவரது பங்களிப்பு எத்தகையது என்பதைச் சொல்லிவிடுகிறது.

பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் முதல் மூன்று எபிசோடுகள் கொஞ்சம் நீளமாக இருப்பதாகத் தோன்றலாம். திரைக்கதையில் பரபரப்பு தொற்றியபிறகு, அது மெல்ல வேகமெடுத்திருப்பது அருமை.

சுரேஷ் கல்லாரியின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒவ்வொரு ஷாட்டும் யதார்த்தத்திற்கு அருகில் உள்ளது போன்ற தோற்றத்தைத் தர உதவியிருக்கிறது.

மெல்ல மெல்ல த்ரில் கூட்டும் விதமாக அமைந்துள்ளது தர்புகா சிவாவின் பின்னணி இசை. ஜெயில் குயில் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்கள் இந்த சீரிஸின் பலம் என்றே சொல்லலாம்.

ஈர்த்த அம்சங்கள்

முதல் எபிசோடில் குழந்தையைப் பிரசவித்த மனைவியுடன் அதர்வா பாத்திரம் நெருக்கம் பாராட்டாமல் இருப்பது சில நிமிடங்களுக்கு நீள்கிறது. அதேபோல, மணிகண்டன் பாத்திரத்தின் அறிமுகத்திற்கு முன்பாகச் சில காட்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகள், போலீஸ் ரிக்கார்டு பின்னணியில் அமைந்த விஎஃப்எக்ஸ் உதவியுடன், ஒவ்வொரு ரவுடியையும் பற்றிய முன்கதை சொல்லப்படுகிறது. அவை நம்மை ஈர்க்கும் அம்சங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்.

அவை தேவையா என்ற எண்ணம் தொடக்கத்தில் ஏற்படலாம். ஆனால், இயக்குனர் உருவாக்கிய உலகத்திற்குள் நுழைவதற்கான கால அவகாசமாகவே அந்நிமிடங்கள் இருக்கின்றன என்பது பின்னர் புரிகிறது.

உதாரணமாக, நிகிலா விமலின் நெருக்கத்தை விலக்கும் நோக்கோடு வீட்டில் இருந்து அதர்வா வெளியே கிளம்புவதுதான் இந்த சீரிஸின் முதல் திருப்புமுனை. அதனை முழுமையாக உணர, அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை என்னவென்று நாம் அறிய வேண்டும். ’ஏன் இத்தனை நீளம்’ என்று அந்த இடத்தில் கேள்வி கேட்கக் கூடாது. அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்கும்போது, இந்த பாணி நமக்கு எளிதில் பிடித்துப் போகிறது. முழுமையாக இந்தக் கதையைப் பார்த்தாக வேண்டும் என்ற பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது. அதனாலேயே, ஐந்தாம் எபிசோடு முடிந்தபிறகு பாதிக்கிணறு தாண்டிய நிலையில் அந்தரத்தில் நிற்கும் உணர்வு உண்டாகிறது.

போலீஸ் விசாரணையில் மேல்மட்டத் தலையீடுகள் எப்படியிருக்கும்? தொழில்நுட்பக் குழுவில் இருக்கும் ஒரு பெண் காவலர் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய ஆபரேஷனை எப்படி எதிர்கொள்வார்? கேங்க்ஸ்டர்கள் வாழ்வில் முரட்டுத்தனத்தைவிட புத்திசாலித்தனத்திற்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் கிடைக்கும் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாக, இதில் சில காட்சிகள் இருப்பது சிறப்பு. இந்த சீரிஸில் வரும் கதாபாத்திரங்களும் சரி, நிகழ்வுகளும் சரி; நாம் படித்த சில தினசரிச் செய்திகளின் இன்னொரு முகமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன் உட்படத் தமிழில் பல இயக்குனர்கள் கையாண்ட உத்தி இது என்பதால், இக்கதையில் இருக்கும் உண்மைத்தன்மையை ஆராய வேண்டிய தேவை இல்லை.

ரவுடிகளின் வாழ்க்கை, ஆபாசமான வார்த்தைப் பிரயோகம், மசாலா பட பாணியில் இருந்து விலகிய காட்சியாக்கம், ஒப்பனையற்ற நடிப்புக்கலைஞர்கள் போன்றவை இந்த வெப்சீரிஸ் பார்ப்பதில் சிலரை விலக்கக்கூடும். மெதுவாக நகரும் காட்சியமைப்பு எரிச்சல் ஊட்டக்கூடும். அவற்றைப் பொருட்படுத்தாவிட்டால், நிச்சயம் நல்லதொரு காட்சியனுபவத்தை இது தரும்.

‘மத்தகம்’ என்றால் யானையின் நெற்றி என்று அர்த்தம். யானை எனும் பெரிய விலங்கு வீழ, அதன் நெற்றியில் பலமாக ஒரு அடி விழுவதே போதுமானது. இந்த சீரிஸின் திரைக்கதையும் அப்படியொரு முடிவை நோக்கியே நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் இரண்டாம் பாகம் வெளியாகும்போது, இன்னும் ஒருபடி மேலே ‘மத்தகம்’ கொண்டாடப்படும். அதற்கான வாய்ப்புகளை கோடிட்டுக் காட்டியிருக்கிறது முதல் பாகம்.

உதய் பாடகலிங்கம்

சிறப்பு கூட்டத்தொடர்: நிறைவேற இருக்கும் ’சர்ச்சை’ மசோதாக்கள்!

மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share