பாஸ்கர் செல்வராஜ்
இயற்கையாகக் கிடைக்கும் தாவர விலங்கினங்களைக் கற்களை உரசி உருவாக்கிய நெருப்பில் சமைத்து உண்டு வாழ்ந்த மனிதர்கள் பிற்காலத்தில் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் கண்டறிகிறார்கள். கால்நடை வளர்ப்பு வேகமாகப் பெருகக்கூடியது. ஆகையால், அதனைக் கைக்கொண்ட சமூகங்களில் வேகமாகத் தனியுடைமைத் தோன்றி தந்தைவழிச் சமூகமாக மாறுகின்றன. விவசாயமோ நுட்பமான அறிவையும் கூட்டுழைப்பையும் கோருவது ஆகையால் தாய்வழி சமூகமாக நீடிக்கிறது.
விவசாய உற்பத்தி பெருகி இதில் தனியுடைமை ஏற்பட வேண்டுமானால் இந்த உற்பத்தியை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகர நுட்பம் தோன்ற வேண்டும். அப்படியான ஒன்று பொஆமு நான்காயிரத்துக்குப்பின் (பொஆமு 3800-1200) தாமிரமும் வெள்ளீயமும் (Copper-tin) கலந்த வெண்கலமாகத் தோன்றுகிறது. அது உருவான பிறகு விவசாய உற்பத்தியின் வளர்ச்சி வேகமெடுக்கிறது. முன்பு மண்ணை உருவாக்கி, மரத்தை எரித்த நெருப்பால் சுட்டு பானை செய்யும் நுட்பம்கண்ட மனிதர்கள் பின்பு அதே முறையில் உலோகப் பொருட்களை செய்யும் நுட்பம் காண்கிறார்கள்.
உலோகங்களாலான பொருட்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. அதிக அளவிலான நிலத்தை உழுது பயிரிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. விவசாய உணவு உற்பத்தி பெருக ஆரம்பிக்கிறது. இப்போது விவசாய சமூகங்களிலும் தனியுடைமை உருவாவதற்கான அடிப்படை தோன்றுகிறது. அதுவரையிலும் ஒற்றுமையாக உழைத்துப் பகிர்ந்துண்டு வாழ்ந்த வாழ்க்கை உடைகிறது.
விவசாய சமூகங்களின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி!

தனித்தனியாக உற்பத்தி செய்து சமூகங்களுக்கு இடையிலும் சமூகத்துக்குள்ளும் ஒருவரிடம் உள்ளதைக் கொடுத்து மற்றவரிடம் தனக்குத் தேவையான பொருளைப் பெறும் பரிவர்த்தனை வளர்கிறது.
ஆனால், எல்லா விவசாய சமூகங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்ததா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த உற்பத்திப் பெருக்கத்துக்கான நிலம், நீர், வெண்கலம் என அனைத்தும் எல்லோருக்கும் ஒருங்கே அமையும் சாத்தியமில்லை. மலைகளை ஒட்டிய பகுதிகளில் கிடைக்கும் உலோகத் தாது, அதனை உருக்கிப் பொருளாக்கும் நுட்பம், அதனை விவசாய உற்பத்திக்குப் பயன்படுத்தத் தேவையான சமவெளி ஆகியவற்றைப் பெற்ற சிந்துவெளி, எகிப்து, சுமேரியா, மெசபடோமியா, கிரேக்க சமூகங்கள் இக்காலங்களில் செழித்து வளர்ந்ததை வரலாறு பதிவு செய்கிறது.
இவர்களின் மொழி வளர்ந்து முறையான எழுத்துருவைப் பெறுகிறது. முன்பு கால்நடை விவசாய சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரணான தாய்-தந்தைவழி வேறுபாடு இப்போது விவசாய சமூகங்களுக்குள்ளும் ஏற்படக் காரணமாகிறது.
இதன் பிறகான இரும்பு காலத்தில் (பொஆமு 1200) வெண்கலத்துக்குப் பதிலாகக் கரியைக் கலந்து உருவாக்கப்பட்ட வலுவான இரும்பு (எஃகு – Steel) விவசாய உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துகிறது. மரத்தாலும் உலோகங்களாலுமான பொருட்களையும் உணவு உற்பத்தியையும் பெருக்குகிறது.
இந்த உற்பத்தியைக் கைக்கொண்ட சமூகங்களின் மொழிகள் வளர்ந்து இந்த அறிவைத் தாங்கி செழுமையடைகின்றன. வெண்கலத்தை உருவாக்க தேவையான வெள்ளீயத்தைப் போன்று கரியோ, இரும்புத்தாதுவோ ஒருசில இடங்களில் மட்டும் குவிந்திருக்கவில்லை என்றாலும் எல்லா சமூகங்களும் ஒரே நேரத்தில் இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கியதாக வரலாறு பதிவுசெய்யவில்லை.
தந்தைவழி சமூகங்களின் ஆதிக்கம்!
அதே நேரம் இதனைக் கைக்கொண்ட விவசாய சமூகங்கள் எல்லாம் தாய்வழியில் இருந்து தந்தைவழிக்கு முழுமையாக மாறுகின்றன. இப்போது கால்நடைச் சமூகத்தினரைப் போலவே இச்சமூகத்தில் உள்ளவர்களும் இந்த நுட்பத்தையும் உற்பத்தியையும் தனதாக்கிக் கொள்கிறார்கள்.
இதை மற்றவர்கள் அறியாவண்ணம் இந்த அறிவையும் அதைக் கடத்தும் எழுத்தையும் இக்குழுவினருக்கு மட்டுமானதாக மாற்றுகிறார்கள். இதுவும் இதன்மூலம் சேர்த்த சொத்தும் மற்றவர்களுக்குச் செல்லாவண்ணம் “இனக்குழுவுக்குள் இருக்கும் குலக்குழுவுக்கு இடையில் மணம்” என்ற இனக்குழு விதியை மீறி இவர்களுக்குள் மணந்துகொள்கிறார்கள். இனக்குழுவுக்குள் உடைமை கொண்ட சிறு குழுவாகப் பிரிகிறார்கள். தந்தைவழி சமூகத்தின் உடைமைக் குழுக்களுக்குள் மோதலும் அதனூடான இணக்கமும் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
இவர்கள் சொந்த இனத்தவரையே சுரண்டி அடிமைப்படுத்துவது மட்டுமல்ல… இப்படி ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்தவர்களைப் படையாகத் திரட்டிக்கொண்டு மற்ற இனங்களையும் அடிமைப்படுத்தவும் கிளம்புகிறார்கள். இந்த நுட்பத்தைக் கைக்கொண்ட காலத்தைப் பொறுத்து பாரசீகர், கிரேக்கர், மௌரியர், ரோமர், சீனர், குப்தர்கள், தமிழர்கள் எல்லாம் வெவ்வேறு காலங்களில் உலகையாளக் கிளம்பியதையும் சுயம்வரம் நடத்தி இவர்களுக்குள் மணந்து கொண்டதையும் அரசர்களின் வரலாறாகப் படிக்கிறோம்.
நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் நிலக்கரியின் பயன்பாடும் எஃகு உற்பத்தியிலும் அதனால் உருவான பொருட்களின் உற்பத்தியிலும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலோகத்தால் ஆன பொருட்களும் இந்தப் பொருட்களை இயக்க தேவையான சாலைகள், தண்டவாளங்கள், எரிபொருள், மின்சார உருவாக்கத்தாலும் உலகமே மாறுகிறது.
உற்பத்திப் பெருக்கம், விரிவாக்கம், போட்டி, போர்…

எஃகை மிகப்பெரும் அளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தையும் இதன் உலக உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டைத் தன்னிடம் வைத்திருந்த இங்கிலாந்து உலகை ஆண்டதில் ஆச்சரியமில்லை. இது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியபோது போட்டிப்போட்டுக் கொண்டு இப்பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குகிறார்கள்.
அதே நேரம் மூலப்பொருட்களுக்கும் இப்பொருட்களை விற்பதற்கான சந்தைக்குமான ஆதிக்கப் போட்டி உலகப்போர்களாக வெடித்து அதில் மக்கள் மடிந்தது அண்மைய வரலாறு. இந்தப் போர்களில் தள்ளிருந்து இப்பொருட்களின் உற்பத்தியையும் அதனை இயக்கத் தேவையான பெட்ரோலிய உற்பத்தியையும் கட்டுப்படுத்திய அமெரிக்கா இதன்பின் உலகை ஆள்கிறது.
முன்பிருந்த கம்பிவழி மின்சாரமும் தொலைபேசியும் இக்காலத்தில் கம்பியில்லா மின்கலத்தில் மின்காந்த அலைகளில் இயங்கும் அலைபேசியாக மாறுகிறது. கணிப்பான் (Calculator) உருவாகி வளர்ந்து கணினியாக மாறுகிறது. இப்போது கணினி மீத்திறன் கணிப்பொறியாக (Super Computer) வளர்ந்திருக்கிறது. அதனை ஓரிடத்தில் நிறுவி கம்பியில்லா மின்கலத்திலும் இணையத்தொடர்பிலும் அதனுடன் தொடர்புகொண்டு இயங்கும் உலோகங்களாலும் குறைமின்கடத்திகளாலும் ஆன மடிக்கணினி, திறன்பேசி உள்ளிட்ட பொருட்களாக மாறி நிற்கின்றன.
இயந்திரங்களை இயக்கிய பெட்ரோலின் இடத்தை மின்கலங்களில் சேமிக்கப்பட்ட மின்சாரம் பதிலீடு செய்கிறது. நிலக்கரி, பெட்ரோலிய பொருட்களால் உற்பத்தியான மின்சாரத்தைக் காற்று மற்றும் சூரிய மின்னாற்றல் பதிலீடு செய்வதை நோக்கி உலக உற்பத்தி நகர்கிறது. இந்தப் புதிய உற்பத்தித் தொழில்நுட்பமும் மூலப்பொருட்களும் அமெரிக்காவிடம் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.
இந்த உற்பத்தி மாற்றமும் அதன் பரவலும் இதுவரையிலுமான உற்பத்தித் தொழில்நுட்பங்களையும் அதன் மூலப்பொருட்களையும் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கிறது. முன்பு இங்கிலாந்தில் இருந்து மற்ற நாடுகளுக்குத் தொழில்நுட்பமும் உற்பத்தியும் பரவியபோது உலகையாள போட்டியிட்டுப் போரிட்டுக் கொண்டார்கள். அதேபோல இப்போதும் இந்நாடுகள் போட்டியிட்டுக்கொண்டு போரிட ஆரம்பித்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது…
1. ஒவ்வொரு காலத்திலும் தோன்றும் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் நடப்பில் இருக்கும் பொருட்களையும் புதிய பொருட்களின் உற்பத்தியையும் பெருக்கி உலகை மாற்றுகின்றன.
2. இதனைக் கண்டறிந்து கைக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கும் சமூகங்கள் புதிய சமூகங்களாக மாற்றம் காண்கின்றன (வெறுமனே இப்பொருட்களைப் பயன்படுத்தும் வாழும் சமூகங்கள் அல்ல).
3. இந்த உற்பத்தி மாற்றத்தோடு தோன்றும் தனியுடைமை நேர்மறையில் குடும்பத்தை மாற்றி அதன் வளர்ச்சிப்போக்கில் அந்த சமூகத்தையே மாற்றியமைக்கிறது.
4. எதிர்மறையில் இந்தத் தனியுடைமை சொந்த இனத்தையும் மற்ற இனங்களையும் சுரண்டி ஒடுக்குவதில் போய் முடிகிறது.
5. இந்த நுட்பங்களின் பரவலாக்கம் எல்லா சமூகங்களும் அடுத்தகட்ட சமூக வளர்ச்சியை அடைந்து சமமாக வாழ வழிவகுக்கிறது. இதனுடன் தோன்றும் ஆதிக்கப்போட்டி சமூகங்களுக்கு இடையிலான மோதலாக வெடித்து மனித இனத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.
ஆக, நுட்பங்கள் உலக மாற்றத்தையும் அழிவையும் ஒருசேரக் கொண்டு வருகின்றன. அதற்காக அதை மறுத்து பழைய கற்காலத்திலேயே வாழ்ந்துவிட முடியாது. அதே நேரம் இந்த மோதலில் பங்கெடுத்து உயிரை விடவும் முடியாது. நமக்கு வாழ்வை எளிதாக்கி மேம்படுத்தும் பொருட்களைப் பெருக்கும் நுட்பம் வேண்டும். அதனுடன் வரும் ஆதிக்கம் வேண்டாம். இந்த நுட்பங்கள் பரவி சமூகங்கள் சரிசமமாக வாழ உதவும் போட்டி வேண்டும். அதனுடன் வரும் போர் வேண்டாம்.
இந்தத் தீமைகளைத் தவிர்த்து நன்மையைப் பெற வேண்டுமானால் இந்த முரணை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நுட்பங்களை உருவாக்குபவர்கள் யார்? அதைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி உலகையாள நினைப்பவர்கள் யார்? என இனம்காண உதவும் வர்க்க அரசியல்தான் நமது வழிகாட்டியாக இருக்கும்.
கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

Comments are closed.