தனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். mastro ilaiyaraaja give his monthly salary to ndf
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த பதிலடியை இந்தியாவின் முப்படையும் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே நாட்டின் தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கக்கோரி சமூகவலைதளத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நாட்டின் மூத்த இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து அதற்கு “வேலியண்ட்” என்று பெயரிட்டேன்
மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்களான நமது ராணுவ வீரர்கள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்ற எதிரிகளை நம் எல்லைகளில் நின்றபடி துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர். நமது தன்னலமற்ற வீரர்கள், எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
’ஜெய பேரிகை கொட்டாடா, கொட்டாடா, ஜெய பேரிகை கொட்டாடா’ – என்ற புரட்சிகரக் கவிஞர் பாரதியாரின் புகழ்பெற்ற கவிதை வரிகளை மேற்கோள் காட்டிய இளையராஜா, “ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் “வீரம்” முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை “தேசிய பாதுகாப்பு நிதிக்காக” ஒரு சிறிய பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இளையராஜாவின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
