”கட்சி நிதி”க்கு வேட்டு.. ’அசால்ட்டா’ ரூ1,200 கோடி வருவாய்.. ‘டாஸ்மாக்’கில் மிகப் பெரிய புரட்சி.. அமைச்சர் விக்னேஷ்

Published On:

| By Mathi

TASMAC Vignesh

டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தை முன்வைத்து கடந்த காலங்களில் கட்சி நிதியாக பெறப்பட்ட ரூ1,200 கோடி, தற்போது அரசு கஜானாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் விக்னேஷ் நேற்று ஜூன் 6-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் மிகவும் பொறுமையுடன் ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதனைச் செயல்படுத்தக்கூடிய நபர்கள். எடுத்தவுடனேயே ஆரவாரம் செய்து, ‘அதைச் செய்துவிடுவேன், இதைச் செய்துவிடுவேன், வானத்திலிருந்து குதித்துவிடுவேன்’ என்று தம்பட்டம் அடிக்கக்கூடிய மனிதர்கள் நாங்கள் அல்லர்.

ADVERTISEMENT

இன்று நாங்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அதாவது ஜூன் 5 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த மாற்றம், ஒரு மிகப்பெரிய புரட்சியாகும். கடந்த பல வருடங்களாக, மது உற்பத்தியாளர்களிடமிருந்தும் (Distilleries) மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் ஒவ்வொரு மதுப் பெட்டிக்கும் (Case) முறையே 90 ரூபாயும், பீர் பெட்டிக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிக்கு 20 ரூபாயும் தனிநபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்டு வந்தது. ஆண்டுக்குச் சுமார் 88 லட்சம் மதுப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு பெட்டிக்கும் பெறப்பட்ட இந்தத் தொகையானது, ஆயிரக்கணக்கான கோடிகளாகத் தனிநபர்கள் கைகளிலும், தனிக்கட்சிகளின் கைகளிலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கைகளிலும் சிக்கியிருந்தது.

இதனை மாற்றியமைக்கும் பொருட்டு, ஜூன் 5 முதல் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் அந்தப் பணம் முழுமையாக அரசு கஜானாவிற்கு மட்டுமே வரவு வைக்கப்படும். ‘இந்தப் பணம் முற்றிலும் எனது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும்’ என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எந்தவொரு அரசியல் கட்சியும் இத்தகையதொரு சீர்திருத்த நடவடிக்கையைத் தமிழகம் முழுவதும் எடுக்கத் துணியாது. ஏனெனில், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குக் கட்சி நிதி (Party Fund) வேண்டும், கட்சியை வளர்க்க நிதி தேவை என்று பல்வேறு வழிகளில் நிதியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ‘இப்படி யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக வரும் கோடிக்கணக்கான பணம்கூட எனக்கு வேண்டாம்; அது என் மக்களுக்கே செல்ல வேண்டும்’ என்று தளபதி அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டவட்டமாகக் கூறினார். அன்றைய இரவே அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

பலர் தங்களின் பெருமளவிலான பண பலத்தைக் கொண்டு இத்துறையில் நுழையப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ‘நான் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகப் பெறமாட்டேன்; என் கூட இருப்பவர்களையும் பெற அனுமதிக்க மாட்டேன்’ என்று தளபதி உறுதியாகக் கூறியுள்ளார். அது தற்போது இந்த மண்ணில் நிஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இத்துறைக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த அரசுத் துறைகளிலுமே ஊழல் இல்லாத ஒரு தூய்மையான நிர்வாகத்தை உருவாக்கி, தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றப் போகிறது.

ADVERTISEMENT

இந்தத் துறையில் என்ன நடந்துள்ளது என்பதை நான் மீண்டும் தெளிவாக விளக்குகிறேன். கடந்த ஆட்சிக்காலங்களில், இத்துறையின் மூலம் மாதத்திற்குச் சுமார் 100 கோடி ரூபாய் வரை தனிநபர்களின் கைகளுக்குச் சென்றுகொண்டிருந்தது. ‘நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன சாதித்துவிட்டீர்கள், என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு நாங்கள் கூறிக் கொள்வது என்னவென்றால், இன்று 1,200 கோடி ரூபாய் வருமானத்தை நேரடியாகத் தமிழக அரசின் கஜானாவிற்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.

இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில், இத்தகையதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைத் தமிழ்நாட்டில் நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதுவே இத்துறையின் மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

தற்போது சிலர், ‘மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறதே, நீங்களும் அதையேதானே செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நீங்கள் இத்துறையைக் கட்டமைத்துச் சென்ற லட்சணமே அப்படித் தான் இருந்தது. அதனை மாற்றுவதற்குச் சற்று காலம் தேவைப்படும். நாங்கள் பொறுப்பேற்று இன்னும் சில நாட்களே ஆகின்றன. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீங்கள், இதற்கு ஏதேனும் மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கலாமே? ஆனால், நாங்கள் இப்போது அதற்கான தீர்வைக் கண்டுவிட்டோம். இந்த மாத இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு (MRP) மேல் கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்பட மாட்டாது. ஒட்டுமொத்தத் துறையும் மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலைக்குள் கொண்டு வருவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் தெரியுமா? அதிகாரிகளை அழைத்து, ‘இதற்கு முன்னால் எவ்வளவு கொடுத்துக் கொண்டிருந்தாய்? இனி எனக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும்; இதனுடன் கூடுதலாக 10 சதவீதத்தைச் சேர்த்துக் கொடு’ என்று பேரம் பேசினீர்கள். அந்தப் பணத்தைப் வசூலிப்பதற்கு ஒரு குழு, அதனை உரியவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஒரு குழு என ஒரு முறைகேடான நிர்வாகத்தையே நடத்திக் கொண்டிருந்தீர்கள்.

எங்கள் நிர்வாகம் அப்படிப்பட்டது அல்ல. இத்துறை எதற்காக உருவாக்கப்பட்டு, எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த உன்னத நோக்கத்திற்காக மட்டுமே முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், கடந்த ஆட்சியில் தனிநபர்களின் கைகளுக்குச் சென்ற பணத்தை மீட்டு, இன்று அரசு கஜானாவில் சேர்த்துள்ளோம். இதேபோன்று இன்னும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் தொடர்ந்து கொண்டு வருவோம். இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share