எத்தனை வயது ஆனாலும் சுவையான உணவு வகைகள் என்றால், நம் அனைவரது மனதிலும் சிறு குழந்தை போல ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கத்தான் செய்கிறது.
அதனால் தான் உலகளவில் நாளுக்குநாள் உணவுப்பொருட்களின் சந்தையானது உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக உணவுத்துறை விஷயத்தில் வளர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரிக்கவே செய்கிறது.
இந்த வளர்ச்சியால் தான் ஸ்விக்கி, சொமாட்டோ என உணவு குறித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் டேஸ்ட் அட்லாஸ் என்னும் நிறுவனம் 2023-24-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பானங்கள், உணவு வகைகள், அரிசி வகைகள் ஆகியவற்றை வகைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தகுந்த இந்திய பானங்கள் இடம் பிடித்துள்ளன. அதுகுறித்த விவரங்களை இங்கே காணலாம்.
மசாலா டீ
உலகின் பெரிய தேநீர் சந்தையாக திகழும் இந்தியாவில் இருந்து, உலகின் மது அல்லாத சிறந்த பானங்களின் பட்டியலில் மசாலா டீ 2-வது இடம் பிடித்துள்ளது. இதில் முதலிடத்தை மெக்ஸிகோ நாட்டின் ஆகஸ் பெரஸ்கேஸ் (Aguas Frescas) என்னும் பானம் பிடித்துள்ளது.
மேங்கோ லஸ்ஸி
பாலில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த பானமாக இந்தியாவின் மேங்கோ லஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

பாஸ்மதி
பிரியாணிக்கு சிறந்த அரிசி பாஸ்மதியா? இல்லை சீரக சம்பாவா? என்று ஒருபுறம் பிரியாணி ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர். இதற்கு நடுவில் உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பட்டர் கார்லிக் நாண்
இதேபோல உலகின் சிறந்த டிஷ் என இந்தியாவில் இருந்து பட்டர் கார்லிக் நாண் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

100 சிறந்த உணவு பிராந்தியங்கள்
உலகின் சிறந்த 100 உணவு பிராந்தியங்கள் அதாவது பகுதிகள் குறித்தும் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதில் பஞ்சாப் 17-வது இடத்தையும், தென் இந்தியா 26-வது இடத்தையும், மகாராஷ்டிரா 42-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மேற்கு வங்காளம் இதில் 60-வது இடத்தையும், தமிழ்நாடு 7௦-வது இடத்தையும் பிடித்துள்ளது. குஜராத்திற்கு 83-வது இடமும், கேரளாவிற்கு 99-வது இடமும் கிடைத்துள்ளது.
ஆலூ பைங்கான்
உலகின் சிறந்த உணவுகள் போல உலகின் 100 மோசமான உணவுகள் பட்டியலையும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து ஆலூ பைங்கான் என்னும் உணவு இடம்பிடித்து இருக்கிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
