மருதமலை கோயில் கும்பாபிஷேகம் : 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Published On:

| By Kavi

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஏப்ரல் 4) விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.  Maruthamala Temple Kumbabhishekam

கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருக பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. 

இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதையொட்டி கடந்த மார்ச் 30ஆம் தேதி மாலை மங்கள இசை, திருமறை, விநாயகர் வழிபாடு, இறை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

மார்ச் 31ஆம் தேதி பிள்ளையார் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. 

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கால யாக வேள்வி தொடங்கி நேற்று 5ஆம் கால யாக வேள்வி நடைபெற்றது. 

தொடர்ந்து கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் தொடங்கியது. 

தொடர்ந்து முருக பெருமானுக்கு ஆறாம் கால வேள்வி நடைபெற்றது. 

காலை 6மணி முதல் 6.45 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் என சமகால கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாச்சலம் அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மங்கள வாத்தியம் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அப்போது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. 

மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், 5 30 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றன. 

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மட்டுமே மலையில் அனுமதிக்கப்பட்டன. 

இதர வாகனங்கள் மலை அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு பக்தர்கள் மேலே அனுமதிக்கப்பட்டனர். 

கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

மிகவும் பிரசத்தி பெற்ற மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு போதுமான பேருந்துகளை இயக்காததால் சிரமமாக இருந்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். Maruthamala Temple Kumbabhishekam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share