தொழிலதிபர் மார்ட்டினின் மருமகனும் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் ஊடகத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா கடந்த ஆண்டு விசிகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. Martin son criticized Aadhav
திமுக தலைமைக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ஆதவ். இதனைதொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து விலகினார்.
இந்தநிலையில், ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவர் ஆளும் திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து கட்சி மேடைகளிலும், நேர்காணல்களிலும் பேசி வருகிறார். இந்தநிலையில், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு அவரது குடும்பத்திலேயே எதிர்ப்பு வெடித்துள்ளது.
சமீபத்தில் ஆதவ் அர்ஜூனா குறித்து தொழிலதிபர் மார்ட்டினின் மகளும் ஆதவ் மனைவியுமான டெய்சி சமூக வலைதள பக்கத்தில், “நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் முடிவுகளும் அரசியல் முடிவுகளும் சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, அரசியலில் எங்கள் குடும்பத்தை இணைக்க வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், லாட்டரி மார்ட்டின் மகனும் ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
பிரசாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்துகொண்டு தனது அரசியல் மற்றும் பணத்தேவைகளை தீர்த்துக்கொள்ள என் தந்தையின் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார். எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகிறார் என்று ஆதவ் அர்ஜூனா குறித்து அண்ணாமலை பேசியதை நான் ஆதரிக்கிறேன்.
ஆதவ் அர்ஜூனாவின் முட்டாள்தனத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். Martin son criticized Aadhav