தண்டர் போல்ட்’ கிக் ‘அடிப்பவருக்கு மனைவி ‘கிக்’ கொடுத்தாரா? ரபார்ட்டோ கார்லஸ் சொத்துக்களை இழக்கிறாரா?

Published On:

| By Kumaresan M

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரபார்ட்டோ கார்லெஸ் தண்டர்போல்ட் ப்ரீ கிக் அடிப்பதில் அசாத்திய திறமை படைத்தவர். உலகின் மிகச்சிறந்த கோல்கள் பட்டியலில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ரபார்ட்டோ கார்லெஸ் அடித்த ஸ்விங் ப்ரீ கிக் கோல்தான் இன்றைய அளவும் சிறந்ததாக கருதப்படுகிறது. 30 அடி தூரத்தில் இருந்து இடது காலால் பந்தின் வலது பக்க அடிப்பகுதியில் ஃபோர்சுடன் கிக் அடிக்க பந்து எதிர்த்து நின்ற மனித சுவரை ஏமாற்றி ஸ்விங்காகி கோலுக்குள் புகுந்தது.

இந்த ஒரு கோல் மட்டுமல்ல கார்லஸ் அடித்த பல ப்ரீகிக்குகள் கால்பந்து உலகில் பேசப்படுவை. மணிக்கு 169 கி.மீ வேகத்தில் இவர் கிக்குகளை அடிக்கும் பலம் கொண்டவர். பல ஆண்டு காலமாக ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் அணிக்கு விளையாடி வந்தார். அப்போது, 4 முறை ஸ்பானீஷ் லீக் பட்டத்தையும் 3 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் கார்லெஸ் வென்றுள்ளார். கார்லெஸ் விளையாடிய காலக்கட்டத்தில் உலகின் மிகச்சிறந்த லெப்ட் பேக் விங்கராக கருதப்பட்டார். கிட்டத்தட்ட 166 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து இவருக்கு உள்ளது.

இந்த நிலையில் கார்லெஸ் மனைவி மரியானா லக்கனை பிரிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 15 ஆண்டு கால இல்வாழ்க்கைக்கு பிறகு, கார்லெஸிடத்தில் இருந்து மரியானா விவகாரத்து கேட்பதாக சொல்லப்படுகிறது. அப்படி, விவாகரத்து கேட்டால் கார்லெஸ் தன் சொத்தில் 100 மில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க நேரிடும். தற்போது, பிரேசிலில் உள்ள வீடுகளில் மரியானா மற்றும் அவரின் குடும்பத்தினர் வசிக்க, கார்லெஸ் மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான பயிற்சி மையத்தில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து , கார்லெஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘உண்மையற்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். நான் எனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன்தான் வசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கார்லெஸ் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு மனைவி மவுனியாவுடன் 2 குழந்தைகள் இருந்தாலும் மேலும் 7 பெண்களுடன் மொத்தம் 11 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். அவர்களில் 9 பேர் பிரேசிலில் வசிக்கின்றனர். ஒரு குழந்தை மெக்சிகோவிலும் மற்றொன்று ஹங்கேரியில் வசிப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

திருப்பதி: தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share