ADVERTISEMENT

மார்கழி அம்மை!

Published On:

| By Balaji

வே. ஸ்ரீராம் சர்மா

பனிசூழ் மார்கழியின் அதிகாலையைப் பிடித்துக்கொண்டு பாசுரங்களைப் பாடியபடியே வீதி வலம் போவது அலாதி சுகம்!

ADVERTISEMENT

உந்திக் குரலெடுத்து ஓங்கிப் பாடுவதால் உடல் சூடாகும். சுவாசப் பாதை சீராகும். மனம் ஒருமைப்படும். குளிர்வசப்பட்டு மனதில் கிளர்ந்தெழும் கெட்டமாச்சரியங்கள் அனைத்தும் பொக்கெனத் தொலைந்து போகும்.

பாடிச் செல்லும் சுகத்தை நான் கண்டேனா என்றால் இல்லை. ஆனால், தன்னை மறந்த நிலையில் பாசுர வலம் செய்யும் பக்தர்களை நேரில் கண்டு நெகிழும் நல்வாய்ப்பைக் கொண்டவன் எழுதுகிறேன்.

ADVERTISEMENT

குறித்துக்கொள்ளுங்கள்… ஆண்டாளம்மை பாடியது ஆண்களுக்காகவும்தான்.

பாரதியார் தனதொரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்… “அட, பரம மூடர்களா! ஆண்கள் கற்பு நெறி தவறினால் ஸ்த்ரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும்?” ஆம், புலனடக்கிப் போவது இருபாலருக்கும் அவசியம் அல்லவா?

ADVERTISEMENT

அன்றொரு நாளில், டாகுமெண்டரி ஃபிலிம் எடுக்க சென்றப்போது அன்றந்த மயிலாப்பூர் மாட வீதியில் திருநீர் அணிந்த ஆண்கள் ஒன்று கூடித் திருப்பாவையை வாயாரப் பாடியபடி வீதி வலம் செய்து கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டேன்.

சுற்றிச் சுற்றிப் படமெடுத்துக் கொண்டிருந்த என்னை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. அவர்கள் வேறு ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

மதம் என்பது வேறு ; ஆன்மிகம் என்பது வேறு! மதம் – தன்முனைப்பை மட்டுமே தரும். ஆன்மிகம் – அதனைக் கடந்து போகும் வழியினைக் காட்டும் என்பதை அவர்களிடம் காண முடிந்தது.

திருப்பாவையில் அதற்கானக் குறிப்பைக் காண முடிகிறது…

மார்கழிக் குளிர் நீராடி மங்கலக் கோலமிடும் பெண்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஆண்களுக்கு உண்டு என்கிறாள் ஆண்டாளம்மை!

“எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ…” எனப் பதினைந்தாம் பாசுரத்தில் மெல்லக் கடிந்து கொள்ளும் அம்மை…

தனது பதினேழாம் பாசுரத்தில்…

அம்பரமே; தண்ணீரே; சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா எழுந்திறாய்!

என்னும் வரிகளில், ‘பற்கள் கிடுகிடுங்கப் பாசுரம் பாடி வரும் மங்கலப் பெண்களை வரவேற்று வாழ்த்தாமல், அப்படியென்ன உனக்கு இன்னமும் பொய் தூக்கம்..!?’ எனக் கண்ணனையும் உசுப்பி கண்மலரச் சொல்கிறாள்.

ஒழுக்க வாழ்க்கையை அறிவுறுத்துகிறாள் அம்மை..

நெய்யுண்ணோம்; பாலுண்ணொம் ; நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் ; மலரிட்டு நாம் முடியோம்!

இப்படிச் சொல்லும் ஆண்டாளம்மை…

செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்!

எனவும் அறிவிக்கிறாள்!

இதற்கு என்ன பொருள்? நாம் அறிந்த வரையில் குறள் என்றால் ஈரடியில் அமைந்த திருக்குறள் மட்டும்தான் அல்லவா? ஆனால், குறள் என்னும் அந்தச் சொல் பல பொருள் கொண்டதாக விரிகிறது. காண்போம்!

ஆண்டாளம்மை வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கில் ‘குறள்’ என்னும் சொல் ஆகப்பட்டது… சிறுமை – குறுமை – பூதம் போன்ற பற்பல அர்த்தங்களைக் கொண்டு அமைந்திருந்தது.

ஆம், குளிரில் எழும் காம பூதத்துக்கு அடிமையாகிப் பண்பால் குறுகிச் சிறுமையான வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்கிறாள்.

ஆண்டாள் அம்மையின் பாசுரங்களை உன்னித்து அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளை ஏன் ‘அம்மை’ என அடியேன் உருகி அழைக்கிறேன் என்பது புரியும்.

அம்மையின் பாசுரத்தில் தாயாருக்கும் மகளுக்கும் இடையில் மட்டுமே அந்தரங்கமாக வெளிப்படக் கூடிய கொச்சைக் கண்டிப்பைக் காண்கிறேன். அது, சித்தர்களுக்கே உண்டான இயல்பு!

ஓரிடத்தில் அம்மை சொல்கிறாள்…

புற்றர வல்குல் புனை மயிலே; போதராய்

சிற்றாதே ; பேசாதே; செல்லப் பெண்டாட்டி நீ!

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

“ஹே… பெண்ணே…கடந்த மார்கழியில் வாசல் கோலமிட்டு கணவனுக்காக ஏங்கிப் பிரார்த்தனை செய்தவள்தானே நீ? அடுத்து வந்த தை மாதத்தில் மாதவன் அருளால் உன் காதல் கொழுந்தனைக் கரம் பிடித்த அதிர்ஷ்டக்காரிதானே நீ? கல்யாணம் முடிந்ததும் உன் ஆன்மிகக் கடமையை மறந்துவிடலாகுமா ?

மஞ்சத்தில் இருக்கும் உன் கொழுந்தன் காதோரம் ஆயிரம் சொல்வான் மயங்கி விடாதே! அங்கே, நாடக மயில் போல நளினம் காட்டுவதை நிறுத்து. நாகம் என்றால் அது புற்றை நோக்கிச் செல்லத்தான் பார்க்கும். உன் புதுக் கணவனுக்கு செல்லப் பெண்டாட்டி அல்லவா நீ? போதும் சிணுங்காதே, காரணம் பேசிக் கொண்டிருக்காதே!

எழுந்து, குளித்துக் கிளம்பு. உனக்கோர் அத்தானை அருளிய அச்சுதனுக்கு நன்றிக் கடன் செலுத்து. பாசுரம் பாடியபடி மாதவன் கோயிலை நோக்கி மார்கழி வீதியில் நடை போடு… என்கிறாள் கண்டிப்பான ஆண்டாளம்மை !

அடியேனைப் பொறுத்தவரை ஆண்டாளம்மை ஓர் பெண் சித்தர். ஆம், சித்தம் சுத்தப்பட்டதொரு நிலை வசப்படாமல் இப்படிப்பட்ட எழுத்துகள் வெளிப்பட்டிருக்க முடியாது.

மாரிக்காலம் முடிந்த தருணம். குகைக்குள் சோம்பிக் கிடந்த சிங்கம் தன் பிடறி உதறி வெளிப்படும் காட்சியினை அற்புதமாக விளக்கும் ஆண்டாளம்மை வாழ்ந்தது திருவில்லிப்புத்தூரில்… அந்தப் புண்ணிய பூமிக்கு மேற்கே சிறு தொலைவில் அமைந்த காட்டுக்குள் – செண்பகத் தோப்புக்குள் – கிருஷ்ண பிரேமையில் – தன்னை மறந்த சித்து நிலையில் ஆண்டாளம்மை உலாவி வந்திருக்கக் கூடும்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக ஒன்பதாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆண்டாளம்மை! ஒன்பது என்ற எண் செவ்வாயைக் குறிப்பது! செங்கனிவாய் திறந்து செப்பிய திருமகளுக்கு ஏற்ற இடமாகவே அது அமைந்து விட்டது!

“அறிவொன்று இல்லாத ஆய்குலத்து உன் தன்மை..”

என ஆண்டாளம்மை சொல்வதை,

“ஐயா, ஆறறிவைக் கொண்டிருந்தும் ‘ஒன்று கண்டால் ஒன்றே’ என ஓர் அறிவாகத் தேங்கி விட்டவர்கள் நாங்கள். நீயோ, அதன் பிறகும் பற்பல அறிவுகளைத் தாண்டிப் பத்தாம் அறிவான வாலறிவன் நிலையினையும் கடந்தப் பேரறிவாளன்…!” என்று ஏற்றிப் போற்றுவதாகவே அடியேன் புரிந்து கொள்கிறேன்.

“திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்

அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்…” என்னும் மந்திர வரிகளில் ஏதோ ஓர் பிரபஞ்ச அறிவியல் பொதிந்து இருப்பதாகவே அடியேன் நம்புகிறேன்.

ஆண்டாளம்மை அருளிய திருப்பாவையின் மேன்மையை இன்னமும் நுணுகி சுவைக்க விருப்பமுள்ளவர்கள் ஆய்ந்த விற்பன்னர்களைக் அணுகுவது நலம்.

எனதின்றைய சக்திக்கு இவ்வளவில் முடிக்கிறேன்.

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே!

                                                              குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா !!

                                                                                                                     ******

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share